மூன்றாவது முறையாக அதிமுகவில் தன்னை இணைத்துக்கொண்ட பிறகு கூடுதல் தெம்புடன் இருக்கும் நடிகர் ராதாரவி, நடிகர் விஷால் தொடங்கி கருணாஸ் வழியாக உதயநிதி ஸ்டாலின் வரை வரிசை கட்டி வம்பு வளர்த்துக்கொண்டிருக்கிறார்.

நேற்று முதல்வர் எடப்பாடி முன்னிலையில் அதிமுகவில் தன்னை ஐக்கியப்படுத்திக்கொண்ட ராதாரவி ஒரு நடிகைக்காக தன்னை சஸ்பெண்ட் செய்ததை தன்னால் ஜீரணிக்க முடியவில்லை என்று சொன்னதோடு நிறுத்திக்கொள்ளாமல் சிலருக்கு சிலரோடு இருக்கும் உறவுமுறைகளைப் பற்றித் தெரிந்துகொள்ளாமல் கமெண்ட் அடித்ததால் தான் கட்சியிலிருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டதாக பட்டவர்த்தனமாகத் தெரிவித்தார். அவர் குறிப்பிட்டது உதய நிதி ஸ்டாலினையும் நயன் தாராவையும் இணைத்துதான் என்பது மிக வெளிப்படையாகவே தெரிந்தது. ‘இது கதிர்வேலன் காதல்’,’நண்பேண்டா’ ஆகிய இரு படங்களில் உதயநிதிக்கு ஜோடியாக நயன்தாரா நடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதனால் திமுக தலைவர் ஸ்டாலின் உச்சக்கட்ட கோபத்திற்கு ஆளாகியுள்ள நிலையில் நடிகர் சங்கத் தேர்தலிலும் திமுகவின் தலையீடு இருந்துகொண்டிருப்பதாகத் தொடர்ந்து குற்றம் சாட்டி வருகிறார். விஷால் அணியினர் நடிகர் சங்கத்துக்காக நிதி திரட்டிய விவகாரத்தில் மட்டும் ரூ 9 கோடிக்கு மேல் மோசம் செய்திருப்பதாகவும், அவர்களது அணியைச் சேர்ந்த கருணாஸ் முதல்வர் எடப்பாடிய ஆதரிப்பதாகச் சொல்லி 7 கோடி ரூபாய் வாங்கி ஏமாற்றியிருப்பதாகவும் கூறியுள்ளார்.

அதே போல் நடிகர் சங்க அடிப்படை உறுப்பினர் பதவிலிருந்து தன்னை நீக்கியதை ரத்து செய்யாவிட்டால் தேர்தலை நடத்தவிடுவதில்லை என்பதில் தான் மிக உறுதியாக இருப்பதாகவும் ராதாரவி தெரிவித்து வருகிறார்.