’ராதாரவியின் ‘டத்தோ’ பட்டமே ஒரு மோசடி வேலை. மலேசியாவில் அப்படி ஒரு பட்டம் வழங்கப்பட்டதாக யாருக்குமே தெரியவில்லை’என்று பாடகி சின்மயி  தன் மீது குற்றம் சாட்டியிருப்பது பொய்யானது என்கிறார் டத்தோவா இல்லையா என்று உறுதி செய்யமுடியாத ராதாரவி.

வைரமுத்து மீது சின்மயி பாலியல் குற்றச்சாட்டுக்களை வாரியிறைத்துக்கொண்டிருந்த நிலையில் தானாகவே வாலண்டியராக வந்து வண்டியில் ஏறியவர் நடிகர் ராதாரவி. அதன்பின்னர் இருவரும் சுமார் இரண்டு மாத காலங்களாக ஒருவர் மீது ஒருவர் சேற்றை வாரி வீசி வருகின்றனர். தனது கடைசி குற்றச்சாட்டில் ராதாரவின் ‘டத்தோ’ பட்டத்தை போலியானது என்று சின்மயி புகார் கூறியிருந்தார்,

இந்நிலையில் அப்புகாருக்கு பதிலளித்த ராதாரவி,’’சின்மயி எல்லா விசயங்களிலும் பொய் பேசுவதையே வழக்கமாக கொண்டுள்ளார். கவிஞர் வைரமுத்து மீது பொய்யான புகார் தெரிவித்து ‘பிளாக் மெயில்’ பண்ண பார்த்தார். முடியவில்லை. இப்போது என்னிடம் வந்து இருக்கிறார். என்னிடம் கொடுப்பதற்கு எதுவும் இல்லை. உண்மை மட்டுமே இருக்கிறது.

மலேசியாவில் ‘டத்தோ’ பட்டம் யார் யார் வழங்குகிறார்கள் என்ற விவரம் கூட தெரியாமல் இருக்கிறார். நான் பட்டம் பெற்றதற்கான ஆதாரங்கள் இருக்கின்றன. தற்போது புதுக்கோட்டையில் இருக்கிறேன். இன்னும் ஓரிரு நாளில் சென்னை திரும்புவேன். சென்னை வந்ததும் ஆதாரங்களை வெளியிடுவேன். சின்மயி வெளியிட்டு இருக்கும் கடிதமே போலியாக இருக்கும் என்று சந்தேகிக்கிறேன். சின்மயியை சும்மா விடப்போவதில்லை. எனக்கு பட்டம் தந்தவர்களே அவர் மீது நடவடிக்கை எடுப்பார்கள்’ என்கிறார்.