actor parthiban speak about Modi

இந்தியகுடி மக்கள் அனைவருக்கும் தங்களது கருத்துக்களை சொல்ல உரிமை உள்ளது எனவும், இப்பிரச்சனையில் தவறான கருத்துக்களை மோடியே சொன்னாலும் மோதிப்பார்த்துவிட வேண்டும் என நடிகர் பார்த்திபன் ஆவேசத்துடன் தெரிவித்தார்.

சென்னையில் நடைபெற்ற வேலு நாச்சியார் நாடகத்தை திரையுலக நட்சந்திரங்களும், பல்வேறு அரசியல் கட்சிப் பிரமுகர்களும் கண்டு ரசித்தனர். இதைத் தொடர்ந்து நடைபெற்ற நிகழ்ச்சியில் வேலு நாச்சியார் கதையை திரைப்படமாக எடுக்கப்போவதாக மதிமுக பொதுச் செயலாளர் வைகோ அறிவித்தார்.

பின்னர் பேசிய நடிகரும், இயக்குநருமான பார்த்திபன், தற்போது கருத்து சுதந்திரத்துக்கு பெரும் ஆபத்து ஏற்பட்டுள்ளது என குற்றம்சாட்டினார். யாருமே தங்கள் கருத்துக்களை உரிமையுடன் எடுத்துச் செல்ல அச்சப்படவேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

ஆனால் கருத்து சொல்வதில் யாரும் பயப்படக்கூடாது என்றும், அதற்கு ஒவ்வொருவருக்கும் உரிமை உள்ளது என்றும் தெரிவித்த பார்த்திபன், இப்பிரச்சனையில் மோடியே சொன்னாலும் மோதிப்பர்த்துவிட வேண்டும் என தெரிவித்தார்.

பிரதமர் மோடி தன்னைவிட சிறந்த நடிகர் என , பெங்களூரு பத்திரிகையாளர் கௌரி லங்கேஷ் கொலை விவகாரம் குறித்து நடிகர் பிரகாஷ் ராஜ், கருத்து தெரிவித்ததற்கு அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில் பார்த்திபனின் இந்த பேச்சு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.