actor namitha marriage in thiruppathi
தனதுநீண்டகாலநண்பர்வீரேந்திராவைநடிகை நமிதா திருப்பதியில் உள்ள இஸ்கான் கிருஷ்ணன் கோவிலில் இன்று திருமணம் செய்து கொண்டார். நமிதாவுக்கு நெருங்கிய நடிகர், நடிகைகள் மற்றும் அவரது நண்பர்கள் மணமக்களை வாழ்த்தினர்.
குஜராத் மாநிலம் சூரத்தைச் சேர்ந்த நடிகை நமிதா கடந்த 2002ஆம் ஆண்டு வெளியான ‘சொந்தம்’ தெலுங்குப் படத்தின் மூலம் அறிமுகமானார். இதைத் தொடர்ந்து விஜயகாந்த் நடித்த ‘எங்கள் அண்ணா’ என்ற திரைப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார். நான்கு தென்னிந்திய மொழிகளிலும் நடித்துள்ள நமிதா, ஹிந்திப் படத்திலும் நடித்துள்ளார்.
கலைஞர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான மானாட மயிலாட நிகழ்ச்சியில் நடிகை நமிதா நடுவராகக் கலந்துகொண்டு கலக்கினார்.

ஜெயலலிதா உயிருடன் இருந்தபோது திருச்சியில் நமிதா தன்னை அஇஅதிமுகவில் உறுப்பினராக இணைத்துக்கொண்டார். ஆனால், ஜெயலலிதா உடல்நிலை சரியில்லாமல் இறந்தபிறகு, அதிமுக தொடர்பான எந்த நிகழ்ச்சிகளிலும் கலந்து கொள்ளாமல் ஒதுங்கியே இருந்தார்.
இதைத் தொடர்ந்து நமிதா, விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ‘பிக் பாஸ்’ நிகழ்ச்சியில் போட்டியாளராகக் கலந்துகொண்டார். ஆனால், சில வாரங்களிலேயே அந்த நிகழ்ச்சியில் இருந்து வெளியேறினார்.

இந்நிலையில் நமிதாவுக்கும், அவருடைய நீண்ட நாள் நண்பரான வீரேந்திர செளத்ரிக்கும் இன்று காலை திருமணம் நடைபெற்றது. ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தைச் சேர்ந்த வீரா, தெலுங்கு மற்றும் மலையாளப் படங்களில் நடித்துள்ளார்.

திருப்பதி மலையடிவாரத்தில் உள்ள இஸ்கான் கிருஷ்ணர் கோயிலில் இன்று காலை 5.30 மணிக்கு திருமணம் நடைபெற்றது. இந்த திருமணத்தில் நெருங்கிய உறவினர்கள், நண்பர்கள் மட்டுமே கலந்து கொண்டனர். ராதிகா சரத்குமார், சரத்குமார், காயத்ரி ரகுராம், ஷக்தி வாசு, ஆர்த்தி உள்ளிட்ட சில சினிமா நட்சத்திரங்கள் மட்டுமே நேரில் கலந்துகொண்டு வாழ்த்து தெரிவித்தனர்.
