பிரபல தெலுங்கு நடிகர் மோகன் பாபுவுக்கு நீதிமன்றம் ஒரு வருட சிறை தண்டனை வழங்கியுள்ளது,  தெலுங்கு திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பிரபல தெலுங்கு நடிகர் மோகன்பாபு, ஸ்ரீ லக்ஷ்மி பிரசன்னா பிக்சர்ஸ் என்ற தயாரிப்பு நிறுவனத்தை நடத்தி வருகிறார்.  இந்த தயாரிப்பு நிறுவனம் சார்பில் ஒரு படத்தை இயக்கிய,  இயக்குனர் சவுத்ரி என்பவருக்கு சம்பளப் பணத்தை செக்காக கொடுத்துள்ளார்.

வங்கியில் போதிய பணம் இன்மை காரணமாக, இந்த செக் பவுன்ஸ் ஆனது.  இதுகுறித்து இயக்குனர் சவுத்ரி, மோகன் பாபுவிடம் கேட்க அதற்கு அவர் சிறிய பதில் கொடுக்கவில்லை என கூறப்படுகிறது.

இதனால் இயக்குனர் சவுத்ரி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரணை செய்த நீதிமன்றம், செக் மோசடி வழக்கிற்காக நடிகர் மோகன் பாபுவிற்கு, ஒரு வருட சிறை தண்டனை மற்றும் ரூ.41.75 லட்சம் அபராதம் விதித்து தீர்ப்பளித்தது.

மேலும் மோகன்பாபு தரப்பு மேல்முறையீடு செய்ய வசதியாக தண்டனையை ஒரு மாத காலத்திற்கு தற்காலிகமாக நீதிபதி நிறுத்தி வைத்துள்ளார். நீதி மன்றத்தின் இந்த தீர்ப்பு தெலுங்கு திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.