‘தேர்தல்ல பா.ஜ.க. கூட கூட்டணி வேண்டவே வேண்டாம். அதுக்குப் பதில் சாகலாம். ஏன்னா ஜெயலலிதா அவங்களோட நேருக்கு நேர் மோதி மோடியா லேடியான்னு கேட்டவங்க. நமக்கு அந்தக் கட்சி கூட்டணி தேவிலையில்லைன்னு சொன்னேன். அதை கேக்காததனாலதான் இவ்வளவு கேவலமான தோல்வி கிடச்சிருக்கு’என்று ஓபிஎஸ், ஈபிஎஸ் இரட்டைத் தலைமைக்கு இன்னொரு இடியை இறக்குகிறார் எம்.எல்.ஏ.கருணாஸ்.

அதிமுகவில் ஒற்றைத் தலைமை குறித்து சில பஞ்சாயத்துகள் நடந்துவரும் நிலையில் தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்குப் பேட்டி அளித்த பிரபல நடிகரும், திருவாடனை தொகுதி எம்.எல்.ஏ.வுமான கருணாஸ்,”தமிழக மக்கள் பா.ஜ.க.மீது எந்த அளவு வெறுப்பில் இருக்கிறார்கள் என்று தெரிந்தும் அவர்களுடன் கூட்டணி வைத்தனர். அதே போல் அம்மா ஜெயலலிதா அறவே வெறுத்த பா.ம.க., தேமுதிக.வுடன் கூட்டணி வைத்ததும் தோல்விக்கு இன்னொரு காரணம்.

பா.ஜ.க.வுடன் கூட்டணிப் பேச்சுவார்த்தை நடக்கும்போதே நான் அதுக்குப் பதில் சாகலாம் என்றே சொன்னேன். ஆனால் என் பேச்சை யாரும் மதிக்கவில்லை. இப்போது அத்தனை தொகுதிகளையும் இழந்துவிட்டு ஒரே ஒரு அமைச்சர் பதவியாவது கிடைக்காதா என்று அடித்துக்கொள்கிறார்கள். அமைச்சர் பதவி கிடைத்தால் மட்டும் இவர்கள் எதையும் செய்துவிடப்போவதில்லை. 

நம்பிக்கையில்லாத் தீர்மானம் வந்தால் நான் யார் பக்கம் நிற்பேன் என்பதை இப்போது சொல்லவேண்டிய எந்த அவசியமும் இல்லை. அதிமுகவில் இப்போது நடந்துவரும் ஒற்றைத் தலைமை விவகாரம் யாரோ ஒருவரின் தூண்டுதலால்தான் நடைபெறுகிறது என்றுதான் தெரிகிறது. நன்னடத்தை விதியில் சசிகலா சிரையிலிருந்து வெளிவரப்போகிறார் என்ற செய்திகள் வந்துகொண்டிருக்கும் சூழ்நிலையில் அந்த ஒற்றைத் தலைமை சசிகலாவாகவே இருக்கவும் வாய்ப்புள்ளது’என்கிறார் கருணாஸ்.