நடிகரா, அரசியல்வாதியா, அ.தி.மு.க.வில் இருக்கிறாரா, தி.மு.க.வில் இணையப் போகிறாரா, டி.டி.வி. தினகரனுடன் நட்பா, பகையா என்ற ஏகப்பட்ட குழப்பங்களைச் சுமந்துகொண்டு உலகத் தமிழர்கள் அனைவரையும் ஒருசேரக் குழப்பி வரும் கருணாஸ், விஷாலும் ஐசரி கணேஷும் வெட்டியாக ஈகோ பார்த்துக்கொண்டு நடிகர் சங்க வேலைகள் எதையும் பார்க்காமல் இருப்பதை விட அவர்கள் சினிமாவை விட்டு வெளியே சென்று விடுவதே நல்லது என்று காட்டமாகக் கமெண்ட் அடித்துள்ளார்.

தேர்தல் நடத்தவே முடியாமல் அரசாங்கத்தின் கட்டுப்பாட்டுக்குள் சிக்கித் தவிக்கிறது தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கம். இன்னொரு பக்கம் அதையும் விடப் பரிதாபமாக தேர்தல் நடந்தும் வாக்குகள் எண்ணப்படாமல் பரிதாபமாய் இருக்கிறது தென்னிந்திய நடிகர் சங்கத்தின் நிலைமை. இதனால் நடிகர் சங்கக் கட்டிடப் பணிகள் 80 சதவிகிதம் முடிந்த நிலையில் கேட்பாரற்றுக் கிடக்கின்றன. நிதி நிலைமைகள் முடங்கியுள்ளதால் மூத்த நடிகர்களுக்கான பென்சன் தொகையும் அப்படியே பல மாதங்களாக நிறுத்தப்பட்டுள்ளது.

இது குறித்து பழனியில் நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில் பேசிய நடிகர் கருணாஸ் “விஷால், ஐசரி கணேஷ் இருவரும் தங்களின் ஈகோவை கை விட வேண்டும். நடிகர் சங்கத்தின் முன்னேற்றம் குறித்து இருவரும் ஒரு முடிவுக்கு வரவேண்டும் .இல்லையேல் பொறுப்பில் இருந்து விலகி சினிமாவுக்கு வெளியே போய்விட வேண்டும்.கட்டிடத் திறப்புக்குப் பின்னால் இருந்து முட்டுக் கட்டை போட்டுக் கொண்டு வருகிறார் ஐசரி கணேஷ். விஷால் தனது பொறுப்பை முற்றிலும் மறந்துவிட்டு படங்கள் நடிக்கப்போய்விடுகிறார். ஆகவே இருவரும் ஒருமித்த முடிவுக்கு வரவில்லை என்றால் உடனே விலகி  மற்றவர்களுக்காவது வழி விடுங்கள்!”என்று காட்டமாகப் பேசினார் கருணாஸ்.