கொரோனா வைரஸ் பீதி காரணமாக திரையுலகைச் சேர்ந்த பலர், மேலும் 21 நாட்கள் 144 தடை நீடிக்கப்பட்டுள்ளதால், வேலை இன்றி வீட்டில் இருக்கும் சூழல் உருவாகியுள்ளது.

தினம்தோறும் வெள்ளித்திரை, மற்றும் சின்னத்திரையில் கிடைக்கும் சிறு சிறு வேலைகள் செய்து, வாழ்க்கையை நடத்தி வந்த ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் வேலையில்லாமல் இருப்பதால், அவர்களுடைய குடும்பமே...  பசியும் பட்டினியுமாக இருக்கும் சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.

இது குறித்து பெப்சி அமைப்பின் தலைவர், இயக்குனர் செல்வமணி சமீபத்தில் உருக்கமாக அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார். இதை பார்த்து மனம் பொறுக்க முடியாமல் பல பிரபலங்கள் தங்களால் முடிந்த உதவிகளை செய்து வருகிறார்கள்.

அந்த வகையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அதிகபட்சமாக 50 லட்சம் ரூபாய் நிதி வழங்கினார். சூர்யா தன்னுடைய குடும்பத்தின் சார்பாக 10 லட்ச ரூபாயும், சிவகார்த்திகேயன் 10 லட்ச ரூபாயும், விஜய் சேதுபதி 10 லட்ச ரூபாயும், நடிகர் பார்த்திபன், தயாரிப்பாளர் எஸ் தாணு, பிரகாஷ்ராஜ் போன்றோர் அரிசி மூட்டைகளையும் பெப்சி தொழிலாளர்களுக்கு வழங்கினர்.

இதையடுத்து தற்போது நடிகர் கமலஹாசன் எவ்வளவு தொகை கொடுப்பார் என அனைவர் மத்தியிலும் ஒரு கேள்வி இருந்த நிலையில், அவர் தன்னுடைய சார்பாக ரூபாய் 10 லட்சம் உதவி அளித்துள்ளார்.

அதே போல் நடிகர் தனுஷ் 15 லட்ச ரூபாயும், பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் 10 லட்ச ரூபாயும் கொடுத்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

மேலும் நடிகர் சங்கத்திற்கும் உதவிகள் தேவை என தனி அதிகாரி நேற்றைய தினம் அறிக்கை வெளியிட்டிருந்த நிலையில், விரைவில் நடிகர் சங்கத்திற்கும் இதுபோன்ற உதவிகள் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.