'மக்களுக்கு செய்ய வேண்டிய சேவையை ஒரு கடமையாகக் கருதாமல் நமக்கு பிச்சை போடுவது போலவே அரசியல்வாதிகள் நடந்துகொள்கிறார்கள். இதற்கு உடனே ஒரு முடிவு கட்டியாக வேண்டும்’ என்று மிக காட்டமாக அறிக்கை வெளியிட்டுள்ளார் மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன்.

வரும் 7ம் தேதி கமலுக்கு 64 வது பிறந்தநாள். வழக்கமாக அவரது பிறந்தநாளுக்கு தமிழகம் முழுவதுமிருந்து ரசிகர்கள் சென்னைக்கு திரண்டு வந்து கமலை வாழ்த்தி ரத்ததானம் போன்ற சேவைகளில் ஈடுபடுவார்கள்.  இம்முறை அப்படி வருபவர்களைத் தடுக்கும்பொருட்டு, தனது பிறந்தநாளுக்கு மூன்று தினங்களுக்கு முன்பே அறிக்கை வெளியிட்டுள்ளார் கமல். அந்த அறிக்கையில்...

“அரசியலையும் நற்பணியையும் இணைத்து, மக்கள் நீதி மய்யம் முன்னெடுத்திருக்கும் அரசியல் பயணம், தமிழகம் மட்டுமல்ல; இந்திய அரசியலுக்கே புதிய அறிமுகம். யாரையும் புகழ்பாடாமல் வசைபொழியாமல் அரசியலை அணுகிக்கொண்டிருக்கிறோம்.  அரசியல் கட்சிகளும் அரசியல்வாதிகளும் மக்கள் நலனை தாங்கள் இடும் பிச்சை போலவும், ஊழல் செய்வதை முழுநேரத் தொழிலாகவும் செய்துகொண்டிருக்கின்றன’’ என்றும் விமர்சித்துள்ளார்.

“என் பிறந்தநாளுக்கு வாழ்த்துகளைப் பெற விரும்புவதைவிட, பிறக்கப்போகும் புதிய தமிழகத்திற்கு வாழ்த்துச் சொல்லவே விரும்புகிறேன். எனவே நிர்வாகிகள் வாழ்த்துவதற்காக நேரில் வருவதைத் தவிர்த்துவிட்டு, உங்கள் பகுதிகளிலேயே நற்பணிகளைச் செய்ய வேண்டும்” என வேண்டுகோள் விடுத்துள்ளார்.

அத்தோடு, உறுப்புதானம் செய்வது, நவம்பர் 7ஆம் தேதி முதல் 10ஆம் தேதிவரை ரத்த தான முகாம் நடத்துவது போன்றவற்றில் ஈடுபட வேண்டும் என்றும் இம்முறை கூடுமானவரை நகரங்களைத் தவிர்த்துவிட்டு, அத்தனை சேவைகளையும் கிராமப்புறங்களிலேயே செய்யவேண்டும் என்று தனது ரசிகர்களுக்கு அறிவுறுத்தியிருக்கிறார் கமல்.