'’எனது ‘ஜிப்ஸி’ படத்தில் தன்னுடன் நடித்த குதிரையிடம் ஏகப்பட்ட மிதிகள் வாங்கினார் நடிகர் ஜீவா. அவர் எத்தனை மிதி வாங்கினாரோ அத்தனை விருதுகள் நிச்சயம் வாங்குவார்’ என்று உத்தரவாதம் தருகிறார் இயக்குநர் ராஜூ முருகன்.

’ஜிப்ஸி’ இன்னும் ஓரிருவாரங்களில் ரிலீஸுக்குத் தயாராகும் நிலையில் அப்படத்துக்காக இந்தியாவின் பல்வேறு பகுதிகளுக்குப் பயணித்த ஜீவா,’ இந்த கதையை ராஜு முருகன் சொன்னபோதே அதன் முக்கியத்துவத்தை உணர முடிந்தது. நாகூர், வாரணாசி, ஜோத்புர், காஷ்மீர் என இந்தியா முழுவதும் படமாக்கி இருக்கிறோம். வெள்ளை குதிரையொன்றும் படம் முழுக்க என்னுடன் நடித்திருக்கிறது.

முதலில் முரண்டுபிடித்த குதிரையிடம் அதற்கு கடலைமிட்டாய் வழங்கி நட்பாக்கிக் கொண்டேன். நடனம் ஆடும் திறமை கொண்ட அந்த குதிரை பல முறை என் கால்களை மிதித்திருக்கிறது. குதிரை மிதித்தால் எப்படி வலிக்கும் என்ற அனுபவம் சிலருக்கு இருக்கும். எனக்கு அந்த அனுபவம் இப்படத்தில் ஏற்பட்டது’ என்றார்.

ஜீவா குதிரையிடம் மிதி வாங்கியது குறித்துப்பேசிய இயக்குநர், ’ஜீவா துவக்கத்தில் குதிரயுடன் செட் ஆக அவ்வளவு சிரமப்பட்டார். ஆனால் ஒரு கட்டத்துக்குப்பிறகு இருவரும் நட்பாகிவிட்டார்கள். அவர்களது காம்பினேஷன் ஹீரோயினுடனான காம்பினேஷனை விட அதிகமாகப் பேசப்படும். குதிரையிடன் அவர் மிதி வாங்கியதற்கு பலனாக அத்தனை விருதுகள் ஜீவாவுக்குக் கிடைக்கும். ஜிப்ஸி என்றால் நாடோடிகள் என்று அர்த்தம். கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரையில் உள்ள மக்களின் வாழ்க்கை, அதன் பின்னணியில் உள்ள அரசியல், அதிகாரம் எளிய மக்களை எப்படி வதைக்கிறது, மனித நேயத்தை நோக்கி நகர வேண்டியதன் கட்டாய சூழல் உள்ளிட்ட வி‌ஷயங்கள் பற்றி இப்படம் பேசுகிறது. இதில் பல மொழிகள் பேசி நடித்திருக்கிறார் ஜீவா’என்கிறார்.