2002 ஆம் ஆண்டு 'யுனிவர்சிட்டி' படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகர் ஜீவன். குறிப்பிட்ட சில படங்களை மட்டுமே தேர்வு செய்து நடித்தார். இயக்குனர் கெளதம் மேனன் இயக்கத்தில் சூர்யா நடித்த 'காக்க காக்க' படத்தில் இவர் நடித்த வில்லன் வேடம் தற்போது வரை ரசிகர்கள் மத்தியில் மறக்க முடியாத கதாப்பாத்திரமாக உள்ளது.

இதை தொடர்ந்து, 'திருட்டு பயலே', 'நான் அவன் இல்லை' ஆகிய வித்தியாசமான கதைகளை தேர்வு செய்து நடித்தார்.  கடந்த நான்கு ஆண்டுகளாக எந்த திரைப்படமும் இவர் நடிப்பில் வெளியாகவில்லை.

 இவர் நடிப்பில் உருவான கிருஷ்ணலீலை மற்றும் ஜெயிக்கிற குதிரை ஆகிய படங்கள் ஒரு சில காரணங்களால் வெளியாகாமல் உள்ளது.

இந்நிலையில் தன்னுடைய வித்தியாசமான பாணியில் 'அசரீரி' என்ற படத்தில் நான்கு ஆண்டுகளுக்கு பின் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார் ஜீவன். அறிமுக இயக்குனர் ஜிகே, என்பவர் இந்த படத்தை இயக்க உள்ளார்.  பிக் பிரண்ட் பிக்சர்ஸ் சார்பில் ஐ.பி.கார்த்திகேயன் தயாரிக்கிறார். நீரவ்ஷா ஒளிப்பதிவு செய்கிறார்.

இந்த திரைப்படம் அறிவியல் எவ்வாறு ஒரு குடும்பத்திற்குள் உணர்ச்சி போராட்டத்தை உருவாக்குகிறது என்பதை மையமாகக் கொண்டு எடுக்கப்பட உள்ளதாக இப்படத்தின் இயக்குனர் கூறியுள்ளார். மிகவும் வித்தியாசமான கதையம்சம் கொண்டு உருவாகும் இப்படம் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை ரசித்து பார்க்கும் படமாக இருக்கும் என படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.