கேரள மாநிலத்தில் கடந்த 10 நாட்களுக்கு மேலாக பேய் மழை கொட்டி வருகிறது. கிட்டத்தட்ட 13 மாவட்டங்கள் முற்றிலும் உருக்குலைந்து போனது. முக்கியமாக இடுக்கி, மலப்புரம், மூணார், கோழிக்கோடு உள்ளிட்ட மாவட்டங்கள் நீரால் மூழ்கிப்  போயின.

கேரளாவில் உள்ள 25 அணைகளும் அதன் முழுக் கொள்ளளவை எட்டிவிட்டதால் அனைத்து அணைகளும் திறந்துவிடப்பட்டுள்ளன. இதனால் கடும் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. பம்பை உள்ளிட்ட ஆறுகளில் வரலாறு காணாத அளவுக்கு வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது.

அய்யப்பன் கோவிலுக்கு பக்தர்கள் வர வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதனால் அந்த கோவிலும் வெறிச்சேடிக் கிடக்கிறது.

அதே நேரத்தில் கனமழை மட்டுமல்லாமல் அந்த மாநிலம் எங்கும் பெரிய அளவில் நிலச்சரிவுகள் ஏற்பட்டு வருகின்றன. இந்த நிலச்சரியில் சிக்கி ஆயிரக்கணக்கான வீடுகள் சேதமடைந்துள்ளன. மேலும் 73 பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்நிலையில் நேற்று பிரபல மலையாள மற்றும் தமிழ் நடிகர் ஜெயராம் தன்து மனைவி பார்வதி மற்றும் மகள் மாளவிகாவுடன் திருச்சூர்  அருகே குதிரன் என்ற இடத்தில் காரில் சென்று கொண்டிருந்தனர்.

அப்போது திடீரென அவர்கள் சென்று கொண்டிருந்த சாலையில் பெரும் சத்தத்துடன் நிலச்சரிவு ஏற்பட்டது. அதில் அவர்கள் சென்ற கார் சிக்கிக் கொண்டது. இது குறித்து தகவலறிந்த காவல் துறையினர் உடனடியாக அங்கு சென்று காருக்குள் இருந்த  நடிகர் ஜெயராம், அவரது மனைவி மற்றும் மகளை மீட்டனர்.

நொடிப் பொழுதில் நிகழ்ந்து விட்ட இந்த சம்பவத்தால்  அதிர்ந்து போன ஜெயராம், தாங்கள் அதிசயமாக உயிர் தப்பியதாக தெரிவித்தார். அவர்களது கார் இன்னும் ஒரு 10 அடி முன்னால் சென்றிருந்தால் அப்படியே நிலத்துக்குள் புதைந்திருபோம் என அதிர்ச்சி விலகாமல் தெரிவித்தார்.

ஜெயராமையும், அவரது குடும்பத்தினரையும் மீட்ட போலீசார், அவரை ஸ்டேஷனுக்கு அழைத்துச் சென்று ஆசுவாசப்படுத்தி அனுப்பி வைத்தனர். நடிகர் ஜெயராம், அவரது மனைவி, மகள் ஆகியோர்  வடக்கஞ்சேரி போலீஸ் நிலையத்தில் அமர்ந்திருந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது