கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக, இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால், கூலி வேலை செய்து வரும், அணைத்து தொழிலாளர்களின் பணிகளும் ஒட்டு மொத்தமாக முடங்கியுள்ளது.

இதனால், அடுத்த வேலை சாப்பாட்டிற்கு கூட பலர் கஷ்டப்படும் நிலை வந்துள்ளது. குறிப்பாக, ஓவ்வொரு நாளும், ஷூட்டிங் நடந்தால் மட்டுமே வீட்டில் அடுப்பு எரியும் என்கிற நிலையில் உள்ள ஆயிரக்கணக்கான சினிமா துறையை சார்ந்தவர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இவர்களின் நிலையை தெரிவிக்கும் விதமாக பெப்சி அமைப்பின் தலைவர் ஆர்.கே.செல்வமணி மிகவும் உருக்கமான அறிக்கை ஒன்றை கடந்த மாதம் வெளியிட்டார்.

இதைத்தொடர்ந்து,  திரையுலகை சேர்ந்த பல பிரபலங்கள்.... அடுத்தடுத்து தங்களால் முடிந்த உதவியை பணமாகவும், அரிசியாகவும் வழங்கி வருகிறார்கள். அந்த வகையில் தற்போது நடிகர் ஜெயம் ரவி பெப்சி கலைஞர்களுக்கு உதவும் விதமாக ரூ.5 லட்சம் நிதி உதவி அளித்துள்ளார்.

ஏற்கனவே, நடிகர் சூர்யா, சிவகார்த்திகேயன், பார்த்திபன், தயாரிப்பாளர் தாணு, இயக்குனர் லோகேஷ் கனகராஜ், யோகி பாபு உள்ளிட்டவர்கள் பெப்சி தொழிலாளர்களுக்கு உதவியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.