மலையாள முன்னணி நடிகர் திலீப், பிரபல நடிகை கடத்தப்பட்டு பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்டு, கொச்சி ஆலுவா சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்த வழக்கில் அவர் மூன்று முறை ஜாமீன் பெற முயற்சிகள் மேற்கொண்டும் நீதிமன்றம் இவருடைய ஜாமீனைத் தள்ளுபடி செய்துவிட்டது.

இந்நிலையில் திலீப்பை, அவருக்கு மிகவும் நெருக்கமானவர்கள் சிறைக்கு சென்று சந்தித்து வருகின்றனர். கடந்த சில நாட்களுக்கு முன், திலீப்பின் இரண்டாவது மனைவி காவ்யா மாதவன், அவருடைய மகள் மீனாட்சி ஆகியோர் திலீப்பை சிறையில் சந்தித்துப் பேசினர்.

தற்போது திலீப்பின் நெருங்கிய நண்பரும் நடிகருமான ஜெயராம், ஓணம் பண்டிகையை முன்னிட்டு நேற்று திலீப்பை சந்திக்க மனு எழுதிக் கொடுத்து சந்தித்தார். சுமார் 20 நிமிடம் இருவரும் அங்கே பேசிக் கொண்டிருந்ததாகக் கூறப்படுகிறது.

இந்த சந்திப்பு குறித்து, நடிகர் ஜெயராம் செய்தியாளர்களிடம் கூறுகையில், “திலீப் என்னுடைய நெருங்கிய நண்பர். அவரை நான் ஒவ்வொரு ஓணம் பண்டிகையின் போதும் சந்தித்து புத்தாடை வழங்குவது வழக்கம். இதனை நான் பல வருடங்களாகச் செய்துவருகிறேன். அதனால் இம்முறையும் அதைத் தவறவிடாமல், அவரை சிறையில் சந்தித்து புத்தாடை கொடுத்தேன்.

திலீப் மீதான இந்த வழக்கு தொடர்பாக நான் எதுவும் பேச விரும்பவில்லை. கடவுள் அருளால் அனைத்து பிரச்னைகளும் முடிந்து, விரைவில் திலீப் வெளியே வருவார். அவருக்காக நான் கடவுளிடம் பிரார்த்தனை செய்து கொள்கிறேன்” என்று ஜெயராம்  கூறினார்.