பாலிவுட் மற்றும் ஹாலிவுட் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக திகழ்ந்து வருபவர் நடிகர் இர்ஃபான் கான்.பாலிவுட்டில் விமர்சனம் மற்றும் வசூல் ரீதியாக நல்ல வரவேற்பை பெற்ற லைஃப் ஆஃப் பை, பிகு, லன்ச் பாக்ஸ் உள்ளிட்ட படங்களில் நடித்தவர் இர்ஃபான் கான். ஹாலிவுட்டில் கூட அமேசிங் ஸ்பைடர்மேன், ஜூராஸிக் வேர்ல்ட் ஆகிய படங்களில் நடித்துள்ளார். 2018ம் ஆண்டு நியூரோ எண்டோகிரைன் என்ற புற்றுநோய் கட்டியால் பாதிக்கப்பட்ட இர்ஃபான் தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்தார். 

இந்நிலையில்  தற்போது 53 வயதாகும் இர்ஃபான் கானுக்கு  திடீரென உடல்நலம் பாதிக்கப்பட்டதை அடுத்து உடனடியாக மும்பையில் உள்ள கோகிலாபென் திருபாய் அம்பானி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு அவருக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வந்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த போதும், புற்றுநோயால் பாதிக்கப்படிருந்த இர்ஃபான் கான் கடந்த 29ம் தேதி காலமானார். 

இர்ஃபான் கானின் மரணம் திரையுலகை மிகவும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. இவரது மரண செய்தியைக் கேள்விப்பட்டு பிரதமர் மோடி முதல் திரைத்துறையின் பிரபலங்களான அமிதாப் பச்சன், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், கமல் ஹாசன், சிரஞ்சீவி, அக்‌ஷய் குமார், ஷாருக்கான் உள்ளிட்ட ஏராளமானோர் ட்விட்டரில் தங்களது இரங்கலை பதிவு செய்தனர். ஆனால் அவரது இறுதிச்சடங்கில் 20 பேர் மட்டுமே பங்கேற்றனர் என்பது ரசிகர்களை மேலும் சோகத்தில் ஆழ்த்தியது. 

இர்ஃபானுக்கு சுதாபா சிக்தார் என்ற மனைவியும், பாப்லி மற்றும் அயன் என்ற மகன்களும் உள்ளனர்.  இந்நிலையில் நடிகரின் மனைவி சுதாபா தனது மறைந்த கணவருக்கு ஒரு இதயப்பூர்வமான இரங்கல் செய்துள்ளார். தனது முகநூல் பக்கத்தில் உள்ள புரொஃபைல் படத்தை மாற்றியுள்ளார். அதில் இர்ஃபானைக் கட்டிப்பிடித்துக் கொண்டிருக்கும் புகைப்படத்தை பதிவிட்டு, "நான் எந்த வகையிலும் பெற்றதை நான் இழக்கவில்லை" என பதிவிட்டுள்ளார்.