பாலிவுட் மற்றும் ஹாலிவுட் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக திகழ்ந்து வருபவர் நடிகர் இர்ஃபான் கான்.பாலிவுட்டில் விமர்சனம் மற்றும் வசூல் ரீதியாக நல்ல வரவேற்பை பெற்ற லைஃப் ஆஃப் பை, பிகு, லன்ச் பாக்ஸ் உள்ளிட்ட படங்களில் நடித்தவர் இர்ஃபான் கான். ஹாலிவுட்டில் கூட அமேசிங் ஸ்பைடர்மேன், ஜூராஸிக் வேர்ல்ட் ஆகிய படங்களில் நடித்துள்ளார். சில வருடங்களுக்கு முன்பு புற்றுநோயால் பாதிக்கப்பட்ட இர்ஃபான் கான் தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்தார். 

சமீபத்தில் இந்த சிகிச்சைக்காக லண்டன் சென்றிருந்த இர்ஃபான் கான் கொரோனா லாக்டவுன் காரணமாக அங்கேயே சிக்கிக்கொண்டார். இந்நிலையில் இர்ஃபான் கானின் தாயார் சயீதா பேகம் ராஜஸ்தானில் உடல் நலக்குறைவால் காலமானார். தனது அம்மாவின் இறுதிச்சடங்கில் கூட பங்கேற்க முடியாமல் வீடியோ காலில் அவரது சடலத்தை பார்த்து கதறி அழுத புகைப்படம் அனைவரையும் கண்ணீரில் மிதக்க வைத்தது. 

இந்நிலையில்  தற்போது 53 வயதாகும் இர்ஃபான் கானுக்கு நேற்று திடீரென உடல்நலம் பாதிக்கப்பட்டதை அடுத்து உடனடியாக மும்பையில் உள்ள  கோகிலாபென் திருபாய் அம்பானி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு அவருக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வந்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த போதும், புற்றுநோயால் பாதிக்கப்படிருந்த இர்ஃபான் கான் இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த செய்தி ஹாலிவுட், பாலிவுட் திரைப்பிரபலங்களையும், சினிமா ரசிகர்களையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. 

தான் நடித்த படங்களுக்காக தேசிய விருது மற்றும் பத்ம ஸ்ரீ விருது பெற்றுள்ளார். மற்ற ஹீரோக்கள் நடிக்க தயங்கும் சவாலான கதாபாத்திரங்களில் திறமையாக நடிக்க கூடியவர். ஹாலிவுட் சினிமாவில் நடிக்க கூடிய மிக முக்கியமான இந்திய நடிகர்களில் இர்ஃபான் கானுக்கு மிக முக்கியமான இடம் இருந்தது குறிப்பிடத்தக்கது. சமூக அக்கறை கொண்ட இவர் தனது படங்கள் மூலமாக மட்டுமல்லாது அறக்கட்டளை மூலமாக ஏழை எளிய மக்களுக்கு உதவி வந்ததாக கூறப்படுகிறது. பாலிவுட்டின் முக்கியமான நடிகரான இவர் கைவசம் தற்போது கூட 5 படங்கள் இருந்துள்ளன.