சில்வர் ஜூப்ளி படமான ‘சின்னத்தம்பி’படத்தில் தான் நடித்த கேரக்டர் ஒன்றைக் கிண்டலடித்து எடுக்கப்பட்டுள்ள ‘சிக்ஸர்’படத்தில் இடம் பெற்றுள்ள சர்ச்சையான காட்சிகளை நீக்குவதோடு அப்படத்தில் இடம் பெற்றுள்ள தனது புகைப்படத்தையும் நீக்கவேண்டும் என்று படக்குழுவினருக்கு பிரபல காமெடி நடிகர் கவுண்டமணி வக்கீல் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.

சற்றுமுன்னர்,...கவுண்டமணி அவர்களின் அனுமதி பெறாமல் அவருடைய புகைப்படத்தையும் வசனங்களையும் 'சிக்ஸர்' என்ற திரைப்படத்தில் தவறான முறையில் அவதூறாக பயன்படுத்திய திரைப்பட தயாரிப்பாளர்கள் திரு.தினேஷ் கண்ணன் மற்றும் திரு.ஸ்ரீதர் மீது நடவடிக்கை எடுக்க கோரி திரு.கவுண்டமணி அவர்களின் வழக்கறிஞர் திரு. க.சசிகுமார் அவர்கள் அனுப்பிய நோட்டீஸ் இத்துடன் இணைக்கப்பட்டுள்ளது என்று ஊடகங்களுக்கு ஒரு மெயில் வந்தது.

அதில் ‘சிக்ஸர்’படத்தில் கவுண்டமணியின் புகழைக் கெடுக்கும் வகையில் கதாநாயகனின் தாத்தாவாக அவருடைய புகைப்படம் மாட்டப்பட்டு மிகவும் கொச்சையான வசனங்கள் பேசப்பட்டிருப்பதாகவும் அதற்கு அவருடைய முன் அனுமதி பெறப்படவில்லை என்றும் அந்தக் காட்சிகளை நீக்காவிட்டால் படத்தின் இயக்குநர் சாச்சி, கதாநாயகன் வைபவ் உள்ளிட்ட படக்குழுவினர் மீது சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரபு,குஷ்பு ஜோடியாக நடித்து பி.வாசு இயக்கியிருந்த ‘சின்னத் தம்பி’ படத்தில் 6 மணிக்கு மேல் கண் தெரியாத மாலைக் கண் நோய் உள்ளவராக கவுண்டமணி கலக்கியிருந்தார். தற்போது ‘சிக்ஸர்’படத்தில் அதே நோய் உள்ளவராக கவுண்டமணியின் பேரனாகச் சித்தரிக்கப்பட்டு வைபவ் நடித்திருக்கிறார். நாளை வெள்ளியன்று இப்படம் ரிலீஸாக உள்ளநிலையில் கவுண்டர் சொன்ன காட்சிகள் நீக்கப்படுமா அல்லது அவரது காலில் விழுந்து காம்ப்ரமைஸ் செய்வார்களா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.