தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வந்தவர் நவசர நாயகன் கார்த்திக். இவருடைய மகன் கெளதம் கார்த்திக்கும் தமிழ் சினிமாவின் இளம் நடிகராக நடித்து வருகிறார். இவர்கள் அனைவரும் போயஸ் கார்டனில் உள்ள இல்லத்தில் வசித்து வருகின்றனர். கெளதம் கார்த்தி எப்போதும் போல் கடந்த செப்டம்பர் 2ம் தேதி சைக்கிளிங் புறப்பட்டுச் சென்றார்.

 


அன்று அதிகாலை தனது ஸ்மார்ட் சைக்கிளை எடுத்துக் கொண்டு மெரினா சாலையில் சைக்கிளிங் சென்றுள்ளார். ராதாகிருஷ்ணன் - டி.டி.கே. சாலை சந்திப்பு வழியாக வீடு திரும்பி கொண்டிருந்த கெளதம் கார்த்திக்கை 2 பேர் வழிமறித்து அவருடைய விலையுயர்ந்த சாம்சங் செல்போனை பறித்துச் சென்றனர். இந்த சம்பவம் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியது. இதுகுறித்து மயிலாப்பூர் போலீசாரிடம் புகார் அளிக்கப்பட்டது. உடனடியாக தீவிர விசாரணையில் இறங்கிய போலீசார் அங்கிருந்த கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்து வந்தனர். 

இந்நிலையில் கெளதம் கார்த்திக்கின் செல்போனை திருடியதாக மயிலாப்பூர் குயில் தோட்டத்தைச் சேர்ந்த 17 வயது சிறுவனையும், பெரும்பாக்கத்தைச் சேர்ந்த சரத் என்பவரையும் போலீசார் கைது செய்துள்ளனர். மேலும் திருட்டு செல்போனை விலைக்கு வாங்கியதாக ராயப்பேட்டைச் சேர்ந்த பைரூஸ்கான் என்பவரையும் போலீசார் கைது செய்துள்ளனர்.