தயாரிப்பாளர் சங்கத்தின் வளர்ச்சி நிதிக்காக நடத்தப்படும் ‘இளையராஜா 75’ நிகழ்ச்சி இன்று மாலை துவங்க உள்ள நிலையில் சங்கத்தின் துணைத் தலைவர் பதவி வகித்தவரும், ராஜா நிகழ்ச்சிக்காக மாய்ந்து மாய்ந்து உழைத்து வந்தவருமான இயக்குநர், நடிகர் ஆர். பார்த்திபன் ராஜினாமா செய்துள்ளார். இது கோடம்பாக்க வட்டாரத்தில் பெரும் பரபரப்பை உண்டாக்கியுள்ளது.

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க தலைவராக நடிகர் விஷால் இருந்து வருகிறார். துணைத் தலைவர்களாக நடிகர் பிரகாஷ்ராஜ், நடிகரும் இயக்குநருமான பார்த்திபன், செயலாளர்களாக கதிரேசன், துரைராஜ், பொருளாளராக எஸ்.ஆர்.பிரபு ஆகியோர் இருந்து வருகிறார்கள்.

இந்த நிலையில், பார்த்திபன் தனது துணைத்தலைவர் பதவியை ராஜினாமா செய்து இருக்கிறார். அவர் தனது ராஜினாமா கடிதத்தை தயாரிப்பாளர்கள் சங்கத்துக்கு அனுப்பி வைத்தார். பதவியை ராஜினாமா செய்தது பற்றியும், அதற்கான காரணத்தை பற்றியும் பார்த்திபன் எதுவும் சொல்லவில்லை.

இளைராஜாவின் தீவிர ரசிகரான பார்த்திபன் இன்று நடக்கவிருக்கும் ‘இளையராஜா 75’ நிகழ்ச்சி அறிவிக்கப்பட்ட தினத்திலிருந்தே, விஷாலை விடவும் பன்மடங்கு ஆர்வம் கொண்டு உழைத்து வந்தார். இன்று திடீரென அவர் ராஜினாமா செய்திருப்பதால் அதற்கான காரணம் ராஜா நிகழ்ச்சி தொடர்பானதாக இருக்கவே அதிக வாய்ப்பிருக்கிறது.