கேரளாவில் பிரபல நடிகை, பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்பட்ட வழக்கில் நடிகர் திலீப் சிறையில் அடைக்கபட்டுள்ள நிலையில், அவரின் மனைவி காவ்யா மாதவனிடம் ஆலுவா போலீசார் 6 மணி நேரம் விசாரணை நடத்தினர்.

கேரளாவில் நடிகை காரில் கடத்தப்பட்டு பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்பட்ட வழக்கில், முக்கிய குற்றவாளியான பல்சர் சுனில் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் நடிகர் திலீப் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

அவரின் ஜாமீன் மனுவை கேரள நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. இந்நிலையில், ஆலுவாவில் உள்ள திலீப்பின் வீட்டுக்கு சென்ற தனிப்படை போலீசார், அவரின் மனைவியும், நடிகையுமான காவ்யா மாதவனிடம் சுமார் 6 மணி நேரம் விசாரணை நடத்தினர்.

கடத்தல் குறித்து ஏற்கனவே காவ்யா மாதவனுக்கு தெரியுமா என்ற கோணத்தில் விசாரணை நடைபெற்றதாகவும், இதில் முக்கிய தகவல்கள் கிடைத்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

இதனைத்தொடர்ந்து, இந்த வழக்கில் காவ்யா மாதவனும் கைது செய்யப்படலாம் என தகவல் பரவி வருவதால் கேரள திரையுலகில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.