ரஜினியின் இரண்டாவது மருமகன் விசாகனை வைத்து கார்த்திக் சுப்பாராஜ் தனது அடுத்த படத்தை இயக்கப்போகிறார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அவர் ஏற்கனவே திட்டமிட்ட தனுஷ் படத்துக்கே திரும்பியிருப்பதாகத் தெரிகிறது.

சென்ற ஆண்டே தொடங்க வேண்டிய தனுஷ் மற்றும் கார்த்திக் சுப்புராஜின் கூட்டணியில் இணையும் புதிய படம், ரஜினிகாந்த்தின் பேட்ட திரைப்படம் காரணமாகத் தள்ளிப்போனது. பின்னர் அது சம்பந்தமாக எந்த ஒரு தகவலும் வெளிவராத நிலையில், படம் கைவிடப்பட்டதாகச் செய்திகள் கசிந்தன. சில மாதங்களுக்கு முன், மதுரையில் இந்தப் படத்துக்கான ஆடிஷன் தொடங்கியுள்ளதாக வந்த செய்தியையடுத்து படம் ட்ராப் ஆகவில்லை என்பது உறுதியானது.

இந்த நிலையில், இந்தப் படம் பற்றிய முக்கியமான தகவல்கள் கிடைத்துள்ளன. வரும் ஆகஸ்ட் மாதம் இந்தப் படத்தின் படப்பிடிப்பு தொடங்கவுள்ளதாம். லண்டனில் தொடங்கவுள்ள முதல்கட்டப் படப்பிடிப்பு தொடர்ந்து 60 நாட்கள் நடைபெறவுள்ளதாம். பிரபல ஹாலிவுட் நடிகர் அல் பசீனோ இந்தப் படத்தில் முக்கியமான கதாபாத்திரத்துக்காக நடிக்க முயற்சி செய்து வருவதாக, முன்னரே ஒரு யூடியூப் சேனலுக்கு கார்த்திக் சுப்புராஜ் தகவல் அளித்தது குறிப்பிடத்தக்கது. ஆனால், அவர் நடிக்கிறாரா, இல்லையா என்பது உறுதியாகவில்லை. இந்தப் படத்தில் நடிக்கும் மற்ற நடிகர், நடிகைகள், தொழில்நுட்பக் குழு பற்றிய அதிகாரபூர்வ அறிவிப்புகள் இன்னும் சில நாட்களில் வெளியாகவுள்ளது.

வெற்றி மாறன் இயக்கத்தில் தனுஷ் நடித்து வரும் அசுரன் படத்தை ஆகஸ்ட் மாதம் வெளியிடவுள்ளதாக படக்குழு திட்டமிட்டுள்ள நிலையில், அசுரனுக்குப் பின் கார்த்திக் சுப்புராஜ் படப்பிடிப்பில் இணைவார் என எதிர்பார்க்கப்படுகிறது.அசுரன் பட வேலைகளுக்கு நடுவே, தனுஷ் தற்போது இரட்டை வேடங்களில் நடிக்கும் துரை செந்தில்குமார் இயக்கத்தில் பெயரிடப்படாத புதிய படத்தில் கவனம் செலுத்திவருகிறார். பரியேறும் பெருமாள் படத்தை இயக்கிய மாரி செல்வராஜின் இயக்கத்திலும் தனுஷ் அடுத்ததாக நடிக்கவுள்ளார். இந்தப் படங்களெல்லாம் முடிந்த பிறகுதான் அண்ணன் செல்வராகவன் படத்துக்கு தரிசனம் தரமுடியுமாம் தம்பி தனுஷ்...