ஆண்டிப்பட்டி அருகே உள்ள குலதெய்வ கோவிலில் நடிகர் தனுஷ், செல்வராகவன், கஸ்தூரிராஜா ஆகியோர் குடும்பத்தோடு கிடா வெட்டி, பொங்கல் வைத்து சாமி தரிசனம் செய்தனர்.
நடிகர் தனுஷ் இயக்கி நடிக்கும் இட்லி கடை திரைப்படத்தில் நித்யா மேனன், சத்யராஜ், அருண் விஜய், ராஜ்கிரண், சமுத்திரக்கனி உள்ளிட்ட ஏராளமான முன்னணி நடிகர்கள் நடித்துள்ளனர். இந்த திரைப்படமானது கடந்த அக்டோபர் 1ந் தேதி உலகம் எங்கும் ரிலீஸ் ஆகி திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது.
இந்தத் திரைப்படம் வெளியாவதற்கு இரண்டு நாட்களுக்கு முன்பு ஆண்டிபட்டி அருகே உள்ள முத்துரங்காபுரம் கிராமத்தில் உள்ள நடிகர் தனுஷ்ன் குலதெய்வம் கோவிலில் தனுஷ் மற்றும் குடும்பத்தினர்கள் வழிபட்டு செய்து சென்றனர்.
இந்த நிலையில் படம் வெளியாகி வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கும் நிலையில், இயக்குனரும், நடிகர் தனுஷ்ன் தந்தை கஸ்தூரிராஜா, அவருடைய மனைவி விஜயலட்சுமி, தனுஷ் மகன்கள் யாத்ரா, லிங்கா மற்றும் செல்வராகவன் குடும்பத்தினர் என மொத்த குடும்பமும் முத்தரங்காபுரம் கிராமத்தில் உள்ள குலதெய்வம் கோவிலுக்கு வந்து சாமி தரிசனம் செய்தனர்.
சாமி தரிசனம் செய்ய செல்லும்போது கிராமத்தை சேர்ந்த மக்கள் மற்றும் உறவினர்கள் தனுசை ஆர்வத்துடன் பார்த்து வரவேற்றனர். ஆனால் நடிகர் தனுசை கிராம மக்கள் உறவினர்கள் பார்க்கவோ பேசவோ முயன்ற போது பவுன்சர்கள் அவர்களை தடுத்து நிறுத்தியதால் அவரது ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.
தனுசை பார்க்க வேண்டும், அவருடன் ஒரு செல்பி எடுக்க வேண்டும் என காலையிலிருந்து ஆவலுடன் காத்திருந்த அந்த ஊரை சேர்ந்த பொதுமக்களும் மற்றும் உறவினர்கள், ரசிகர்களும் பெரும் ஏமாற்றுத்துடன் திரும்பிச் சென்றனர். சொந்த ஊருக்கு வரும் நடிகர் தனுஷ் அந்த கிராமத்தை சேர்ந்த மக்களையே சந்திக்காமல் சென்றது அப்பகுதி மக்களிடையே பேசு பொருளாகி உள்ளது.
