நடிகர் போண்டா மணி மரணம்.. சோகத்தில் மூழ்கிய திரையுலகம் - காலத்தால் அழியாத அவருடைய டாப் 5 படங்கள்!
Actor Bonda Mani : இலங்கையில் பிறந்து, சிங்கப்பூரில் பணியாற்றி, இயக்குனர் பாக்கியராஜ் உதவியால் நடிகராக மாறி இப்பொது வெகு சீக்கிரம் இவ்வுலகை விட்டுச்சென்றுள்ள நடிகர் தான் போண்டா மணி.
இலங்கைத் தமிழரான கேதீஸ்வரன் என்கின்ற போண்டா மணி பிழைப்பு தேடி சிங்கப்பூர் சென்ற பொழுது இயக்குனர் பாக்யராஜ் அவரை கண்டு திரை துறையில் அறிமுகம் செய்தார். 1991 ஆம் ஆண்டு வெளியான கே. பாக்யராஜ் அவர்களுடைய இயக்கம் மற்றும் நடிப்பில் வெளியான "பவுனு பவுனுதான்" என்கின்ற திரைப்படத்தின் மூலம் தான் இவர் திரையுலகில் அறிமுகமானார். அன்று தொடங்கி இன்று வரை சுமார் 32 ஆண்டுகளாக தமிழ் திரை உலகில் மிகச்சிறந்த காமெடி நடிகராக இவர் விளங்கி வருகிறார்.
சுந்தரா டிராவல்ஸ்
வடிவேலு மற்றும் போண்டா மணி இணைந்து நடித்து காமெடியில் கலக்கிய சுந்தரா டிராவல்ஸ் திரைப்படத்தை யாராலும் அவ்வளவு எளிதில் மறந்து விட முடியாது. அந்த திரைப்படத்தில் ஒரு சிறு கதாபாத்திரம் தான் அவர் ஏற்று நடித்தார் என்ற பொழுதும், மணமகனாக தோன்றும் அந்த ஒரே ஒரு காட்சியில் மிக நேர்த்தியான நடிப்பை வெளிப்படுத்தி மக்களை மகிழ்வித்திருப்பார் போண்டா மணி.
மருதமலை
ஒரு பிச்சைக்காரன் கையில் இவ்வளவு பணமா என்று வடிவேலு பேசும் வசனத்தையும், ஏட்டையா என்னிடம் இருந்து எடுத்த பணத்தை திருப்பி கொடுங்கள் என்று போண்டாமணி பேசும் வசனத்தையும் நம்மால் அவ்வளவு எளிதில் மறந்து விட முடியாது. போண்டா மணிக்கு மிகப்பெரிய அங்கீகாரத்தை பெற்றுக் கொடுத்த படங்களில் மருதமலை திரைப்படமும் ஒன்று. அதிலும் அவர் ஏற்று நடித்த அந்த பிச்சைக்காரன் கதாபாத்திரம் பலராலும் விரும்பப்பட்டது.
ABCD
நடிகர் போண்டாமணி வடிவேலு அவர்களுடன் நடித்து புகழ்பெற்ற மற்றொரு திரைப்படம் தான் ABCD. இந்த திரைப்படத்தில் ஒரு சிறு கதாபாத்திரம் தான் ஏற்று நடித்திருப்பார் என்றாலும் அது மக்கள் மத்தியில் பெரிய அளவில் பிரபலம். பாம்பாட்டியாக பேருந்துக்குள் வடிவேலு மற்றும் போண்டாமணிக்கு இடையே நடக்கும் அந்த காமெடி காட்சி பலராலும் ரசிக்கப்பட்ட காட்சிகளில் ஒன்று.
வின்னர்
வின்னர் திரைப்படம் முழுக்க வடிவேலுவின் காமெடி நிறைந்திருக்கும், அந்த படத்தில் போண்டா மணி அவர்களின் கதாபாத்திரமும் வித்யாசமாக அமைக்கப்பட்டிருக்கும். கைப்புள்ளையில் தோழர்களாக முத்து காளை மற்றும் போண்டா மணி உள்ளிட்ட பலரும் நடித்திருப்பார்கள்.
கண்ணும் கண்ணும்
இந்த படம் போண்டா மணியின் மிகசிறந்த படம் என்றே கூறலாம், குளத்தில் இருந்து வெளியே வந்து வடிவேலுவை குழப்பிவிட்டு தப்பி செல்லும் போண்டா மணி கதாபாத்திரம் அல்டிமேட்டாக அமைக்கப்பட்டிருக்கும். இந்த படத்தின் இயக்குனர் வேறு யாருமல்ல, அண்மையில் மறைந்த நடிகர் மாரிமுத்துவின் முதல் படம் தான் இது என்பது குறிப்பிடத்தக்கது.