'வெற்றிகொடிக்கட்டு' படத்தின் மூலம் காமெடி நடிகராக, வெள்ளித்திரையில் காலடி எடுத்து வைத்தவர் நாடக கலைஞர் பெஞ்சமின். இதை தொடர்ந்து சுமார் 40 க்கும் மேற்பட்ட படங்களில் இவர் சிறு சிறு கதாபாத்திரத்தில் நடித்திருந்தாலும், தளபதி விஜய்க்கு நண்பராக நடித்த 'திருப்பாச்சி' திரைப்படம் தான் இவருக்கு மிகப்பெரிய திருப்பு முனையாக அமைந்தது.

சேலத்தில் தன்னுடைய குடும்பத்தினரோடு வசித்து வரும் பெஞ்சமினுக்கு, கடந்த இரு தினங்களுக்கு முன் மாரடைப்பு ஏற்பட்டது. இதை தொடர்ந்து, இவரை அவரது குடும்பத்தினர் சேலத்தில் உள்ள அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். இரண்டு நாள் சிகிச்சைக்கு பின் அறுவை சிகிச்சைக்காக, தற்போது பெங்களூருவில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்க மருத்துவர்கள் கூறியுள்ளதாக நேற்று வீடியோ ஒன்றை வெளியிட்டு, மருத்துவ உதவி கேட்டுள்ளார். 
 
இந்த வீடியோவில் அவர் கூறியுள்ளதாவது, ''எனக்கு ஹார்ட் அட்டாக் வந்து சேலத்தில் மூன்று நாட்கள் சிகிச்சை எடுத்தேன்.

இங்கு அறுவைசிகிச்சை செய்யும் அளவிற்கு எனக்கு வசதியில்லை. பெங்களூருவில் உள்ள நாராயணா ஹிருதயாலயா மருத்துவமனைக்கு கொண்டு செல்லுமாறு மருத்துவர்கள் கூறியுள்ளனர்.

எவ்வளவு செலவாகும் என்று தெரியவில்லை. நண்பர்கள் உங்களுக்குத் தெரிந்த மருத்துவ நண்பர்களிடம் கூறி, மருத்துவ உதவி செய்யுமாறு கேட்டுக்கொள்கிறேன்'' என்று கூறியுள்ளார். காசு பணம் உதவி வேண்டும் என கூறாமல் மருத்துவத்திற்கு மட்டும் உதவி கூறுமாறு இவர் கேட்டுள்ளதால் பலர் உதவி செய்ய முன்வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.