பொதுக்குழு கூட்டத்தில் பெரும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. கைகலப்பும் நடந்தது. கருணாசின் கார் கண்ணாடியும் உடைக்கப்பட்டது. கருணாஸ் ஆதரவாளர்கள் தாக்கியதிள் ஓருவர் காயமடைந்தார். பொதுக்குழுவுக்கு எதிர்ப்பு தெரிவித்து கோஷமிட்ட 10 க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.

பொதுக்குழு கூட்டம் ஆரம்பித்தவுடன் ஒரு கும்பல் ஆவேசமாக ஒரு வாலிபரை தாக்கியது. உடனடியாக போலீசார் புகுந்து சிரமப்பட்டு அந்த வாலிபரை மீட்டனர். ஆனாலும் அந்த கும்பல் துரத்தி துரத்தி அந்த வாலிபரை கடுமையாக தாக்கியது.

கருணாசின் ஆதரவாளர்கள் என கூறப்பட்ட அந்த கும்பலின் பிடியிலிருந்து அந்த வாலிபரை போலீசார் மீட்டு சென்றனர். பின்னர் திடீரென ஒரு கும்பல் நடிகர் சங்க பொதுக்குழு கூட்ட அரங்கில் நுழைய முயன்றது.
அவர்களை போலீசார் தடுத்தனர், பவுன்சர்கள் குறுக்கே மறித்தனர். இதனிடையே அந்த கும்பல் அடையாள அட்டையை காட்டியதால் அவர்களை உள்ளே அனுமதித்தனர். அவர்கள் வளாகத்தின் உள்ளே புகுந்து கோஷமிட்டனர்.

பொதுக்குழுவை ரத்து செய் இது பொதுக்குழுவே அல்ல என கோஷமிட்டு தர்ணாவில் ஈடுபட்டனர். இதனால் அங்குள்ளவர்களுக்கும் கோஷமிட்டு தர்ணாவில் ஈடுபட்டவர்களுக்கும் இடையே தள்ளு முள்ளு ஏற்பட்டது. மோதல் ஏற்படும் சூழ்நிலை உருவானது.
உடனடியாக போலீசார் தலையிட்டு தர்ணாவில் ஈடுபட்டவர்களை இழுத்து சென்று கைது செய்தனர். இதில் சில பெண்களும் அடக்கம். மொத்தம் 21 பேர் கைது செய்யப்பட்டு போலீஸ் வேனில் ஏற்றி அனுப்பி வைக்கப்பட்டனர்.
கைது செய்யப்பட்டவர்கள் ஆவேசத்துடன் கூறியதாவது. இது பொதுக்குழுவா , போலி பொதுக்குழு முறையில்லாமல் கூட்டுகிறார்கள். கேட்டால் எங்களை போலீசை வைத்து கைதுசெய்கிறார்கள் , அடியாட்களை வைத்து தாக்குகிறார்கள்.

நாங்கள் என்ன தீவிரவாதிகளா நியாயத்தை தானே கேட்கிறோம் அதற்கு கைதா என்று ஆவேசத்துடன் பேசினர்.பின்னர் போலீசார் அவர்களை போலீஸ் வேனில் அழைத்து சென்றனர். அதன் பின்னர் கூடியிருந்த பொதுமக்களையும் போலீசார் விரட்டியடித்தனர்.
இதனால் அந்த இடம் அமைதியானது. தொடர்ந்து பொதுக்குழு நடந்து வருகிறது.
