நடிகர் சங்க பொதுக்குழு கூட்டம் அறிவிக்கப்பட்டதிலிருந்தே பரபரப்பு தொற்றிகொண்டது. கூட்டத்தை நடத்த உத்தேசித்த இடத்துக்கு எதிரான நீதிமன்ற வழக்கை தொடர்ந்து போலீசார் அனுமதி மறுத்தனர்.
பொதுக்குழுவை நடத்த நடந்த கூட்டத்திலேயே நடிகர் கருணாசும் , ரித்தீஷும் மோதிகொண்டனர் இதனால் நடிகர் ரித்தீஷ் பொதுக்குழுவை புறக்கணித்தார். பொதுக்குழு கூட்டத்தை நடத்த முறையான அனுமதி பெறவில்லை என ஒரு பிரிவினர் புகார் அளித்தனர்.

பொதுக்குழு கூட்டம் தொடங்கிய நிலையில் எதிர்பார்த்த கூட்டம் வரவில்லை. காரணம் போலீசார் பாதுகாப்பு அளிக்க மறுத்த காரணத்தாலும் , பொதுக்குழுவில் தகராறு ஏற்பட காரணமாக அமையும் என்பதால் 500 க்கும் குறைவான பொதுக்குழு உறுப்பினர்களே கூட்டத்துக்கு வந்தனர்.
முன்னனி நடிகர் நடிகைகள் யாரும் வரவில்லை, பஞ்ச பாண்டவர் அணியின் வெற்றிக்காக ஓடி ஓடி பாடுபட்ட இளம் நடிகர் நடிகைகள் ஒருவர் கூட வரவில்லை. நடிகர் வடிவேலு உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் கூட்டத்தை புறக்கணித்தனர்.
இதனால் காலை முதலே கூட்டம் நடப்பதில் பிரச்சனை இருந்து வந்தது. நடிகர்கள் சிவகுமார் , கருணாஸ் , பிரபு , பொன்வண்ணன், பார்த்திபன் , பாக்யராஜ் , மன்சூர் அலிகான் , குண்டுகல்யாணம் , நடிகைகள் அம்பிகா , சங்கீதா , ரேவதி , கோவை சரளா உள்ளிட்ட சிலரே வந்தனர்.

எதிர் அணியை சேர்ந்த ஒருவரும் வரவில்லை. விஷாலின் நெருங்கிய நண்பர்களான ஜீவா, ஜெயம் ரவி, சூர்யா , தனுஷ், விஷ்ணு விஷால் , விக்ராந்த், சாந்தனு , பிரித்வி , ஆர்யா , பரத் , ஷாம், உள்ளிட்ட யாரும் கலந்துகொள்ளவில்லை. இளம் நடிகைகளும் வரவில்லை.
பொதுக்குழு தொடங்கியதிலிருந்தே பரபரப்புக்குள்ளானது. கூட்டத்துக்கு போலீசார் குறைந்த அளவே பாதுகாப்பை அளித்திருந்தனர். பொதுமக்கள் ரசிகர்கள் கூட்டம் ஒரு பக்கம் திரண்டு நிற்க வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்திற்குள்ளாகினர்.

மோதல் போக்கை தடுக்க பவுன்சர்கள் எனப்படும் அடியாள் கும்பல் வாயிலில் பாதுகாப்புக்கு நின்றது. அந்த கும்பல் தவிர வெள்ளை சட்டை ஜீன்ஸ் பேண்ட் அணிந்த கருணாசின் ஆதரவாளர்களும் கும்பலாக நின்று கொண்டிருந்தனர்.
இவ்வளவு பரபரப்பான சூழ்நிலை காரணமாக கூட்டம் குறைவாகவே வந்தது.
