நடிகர் சங்க பொதுக்குழுவை கல்லூரி வளாகத்தில் நடத்த கூடாது என்ற வழக்கு தொடர்பாக பதிவாளர் பட்டியலிடாமல் வைத்திருந்ததை பற்றி அறிந்த நீதிபதி வழக்கு விசாரணைக்கு பட்டியலிட உத்தரவிட்டார். இதனால் நடிகர் சங்க பொதுக்குழுவுக்கு சிக்கல் எழுந்துள்ளது.

சென்னை லயோலா கல்லூரியில் வருகின்ற நவம்பர் 27ம் தேதி நடிகர் சங்க பொதுக்குழு கூட்டம் நடைபெற உள்ளது. இதை எதிர்த்து பத்திரிகையாளரும்,சமூக சேவகியுமான எஸ்.சுஜித்தா என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொது நல வழக்கு தாக்கல் செய்தார். 

அவரது மனுவில் தனியார் பள்ளிகள் (ம) கல்லூரிக்கென "மின் கட்டண சலுகை வழங்கப்படுகிறது. இதை பெற்றுக்கொண்டு கல்விக்கு சம்பந்தப்படாத நிகழ்ச்சிகளை கல்வி நிறுவனங்களின் வளாகத்தினுள் அனுமதிக்கின்றனர். இதனால் அரசு வழங்கும் மானிய மின் கட்டணம் தவறாக நிகழ்ச்சி நடத்துபவர்கள் துஷ்பிரொயோகம் செய்கின்றனர். இதனால் கல்வி நிறுவனங்களுக்காக வழங்கப்படும் நோக்கம் சிதைக்கப்படுகிறது என்று தெரிவித்திருந்தார். 

மேலும் கல்வி நிறுவங்களின் கூடங்களில் சம்பந்தமில்லாத நிகழ்ச்சிகளுக்கு அனுமதி அளிக்க கூடாது என்று தெரிவித்திருந்தார். இதை பதிவாளர் பட்டியலிடவில்லை. இதையடுத்து சுஜித்தா தரப்பு வழக்கறிஞர் சுரேஷ் இது குறித்து நீதிபதி கிருபாகரனிடம் முறையிட்டார் .

வழக்கின் தன்மை குறித்து கேட்டறிந்த நீதிபதி அப்படி எந்த நிகழ்ச்சி நடக்கிறது என்று கேட்டார். அதற்கு வழக்கறிஞர் நடிகர் சங்க பொதுக்குழு லயோலா கல்லூரியில் நடக்கிறது என்று தெரிவித்தார். இதில் உங்களுக்கு எதாவது உள்நோக்கம் இருக்கிறதா என்று கேட்டார் நீதிபதி. 

உள்நோக்கம் எதுவும் இல்லை பொதுவாக கல்வி நிறுவனங்களில் இது போன்ற பொது நிகழ்ச்சிகள் நடத்துவதால் மின் வாரியத்துக்கு வருமான இழப்பு அதன் நோக்கமும் மாறுகிறது என்று வக்கீல் சுரேஷ் தெரிவித்தார். இது ஏற்கத்தக்க வழக்குத்தான் , இதை பொதுநல வழக்காக பட்டியலிடுங்கள் என்று தெரிவித்தார் நீதிபதி கிருபாகரன். 

பட்டியலிட்டபின்னர் இந்த வழக்கு தலைமை நீதிபதி அமர்வு முன்பு விசாரணைக்கு வரும். அதில் மாறுபட்ட தீர்ப்பு வந்தால் பொதுக்குழு நடத்துவதில் சிக்கல் உருவாக வாய்ப்புள்ளது.