கமிஷனர் ஆபீசுக்கு திடீர் விசிட் அடித்த ஆர்யா... வெளியானது பரபரப்பு காரணம்!
குற்றப்பத்திரிக்கையில் தனது பெயரை நீக்க உள்ளதற்கும், குற்றவாளிகளை கைது செய்ததற்காகவும் நேரில் சந்தித்து நன்றி தெரிவித்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் ஆர்யா, ஜெர்மனி நாட்டைச் சேர்ந்த இலங்கை தமிழ் பெண் ஒருவரை திருமணம் செய்து கொள்வதாக கூறி ரூபாய் 71 லட்சம் பணம் பறித்துக் கொண்டு, பின்னர் தன்னை திருமணம் செய்து கொள்ளவில்லை என ஆர்யா மீது விட்ஜா என்ற பெண் சிபிசிஐடி-யிடம் ஆன்லைன் மூலம், புகார் கொடுத்தார். இந்த சம்பவம் தமிழ் சினிமா ரசிகர்கள், மற்றும் பிரபலங்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
காவல்துறை நடவடிக்கை எடுக்காததை தொடர்ந்து, ஜெர்மனியில் வசிக்கும் இலங்கையைச் சோந்த இளம்பெண் விட்ஜா என்பவா் நடிகா் ஆா்யாவுக்கு எதிராக வழக்குப்பதிவு செய்ய உத்தரவிடக் கோரி சென்னை உயா்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அந்தப் புகாரை விசாரித்த உயா்நீதிமன்றம், புகாா் குறித்து விசாரணை செய்து பதிலளிக்குமாறு சென்னை சைபா் குற்றப்பிரிவுக்கு உத்தரவிட்டது.
இந்த உத்தரவின் அடிப்படையில், நடிகா் ஆா்யாவிடம் சைபா் குற்றப்பிரிவினா் கடந்த 10-ஆம் தேதி விசாரணை செய்தனா். இதனைத் தொடர்ந்து ஆா்யாவின் பெயரப் பயன்படுத்தி, மாறுவேடத்தில் வேறு ஒரு நபா், அந்தப் பெண்ணிடம் பேசி ரூ.70 லட்சம் மோசடி செய்திருப்பதை போலீஸாா் கண்டறிந்தனர். இதனையடுத்து ஆா்யா போல பேசி மோசடியில் ஈடுபட்டது சென்னை புளியந்தோப்பைச் சோந்த முகமது அா்மான், அவருக்கு உடந்தையாக முகமது அா்மானின் உறவினா் முகமது ஹூசைனி பையாக் ஆகியோரை தனிப்படை போலீசார் கைது செய்தனர்.
கைதான முகமது அா்மான், முகமது ஹூசைனி பையாக் ஜாமீன் கோரி தாக்கல் செய்த மனு மீதான விசாரணை, செப்டம்பர் 3 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இதனிடையே செய்தியாளர்களை சந்தித்த ஜெர்மனி பெண்ணின் வழக்கறிஞர் முதல் தகவல் அறிக்கையில் முதல் குற்றவாளியாக நடிகர் ஆர்யா மற்றும் இரண்டாவது குற்றவாளியாக ஆர்யாவின் தாயார் ஜமீலாவின் பெயரை மத்திய குற்றப்பிரிவு போலீசார் சேர்த்துள்ளதாகவும் அவர்கள் இன்னும் கைது செய்யாமல் இருக்கிறார்கள் என குற்றம் சாட்டினார்.
ஆனால் அதேசமயம் போலீசார் தரப்பில் பாதிக்கப்பட்ட ஜெர்மனி பெண் அளித்த புகாரின் அடிப்படையிலேயே ஆர்யா மற்றும் அவரது தாயார் ஜமீனா ஆகியோரது பெயர்கள் எஃப்ஐஆரில் சேர்க்கப்பட்டதாகவும், விசாரணையில் அவர்களுக்கு இதில் தொடர்பில்லை என்பது தெரியவந்ததால் குற்றப்பத்திரிக்கையைத் தாக்கல் செய்யும் போது ஆர்யாவின் பெயர் நீக்கப்பட்டு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் இன்று நடிகர் ஆர்யா, யாருக்கும் தெரியாமல் விஐபி கேட் வழியாக வந்து சென்னை மாநகர காவல் ஆணையரை சந்தித்துவிட்டு சென்றுள்ளார். குற்றப்பத்திரிக்கையில் தனது பெயரை நீக்க உள்ளதற்கும், குற்றவாளிகளை கைது செய்ததற்காகவும் நேரில் சந்தித்து நன்றி தெரிவித்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.