actor arya praises actor santhanam on the lawyer attacking issue

பிஜேபி பிரமுகர் மூக்கில் குத்திய சந்தானத்தை பாராட்டிப் பேசினார் ஆர்யா! அது, ‘சக்க போடு போடு ராஜா’ ஸ்டண்டின் முன்னோட்டமாம்!

சக்க போடு போடு ராஜா என்ற படத்தில் காமெடி, ஆக்‌ஷன் ரோல் என நடித்திருக்கிறார் சந்தானம். இவர் இப்படத்தில் ஒரு காட்சியில், இப்படி வசனம் பேசுகிறார்... பஞ்ச் டயலாக் பேசி அடிக்கிறது பழைய ஸ்டைலு; பஞ்ச் டயலாக் பேசுறவன அடிக்கிறது தாண்டா புது ஸ்டைலு!” இப்படி இவர் படத்தில் கூறிய வசனத்தைப் போல், பிஜேப்பின்னா என்ன பெரிய ‘....’? என்று கேள்வி கேட்டு பஞ்ச் டயலாக் பேசிவிட்டு அடித்து வந்திருக்கிறார் சந்தானம். 

நடிகர் சந்தானம் அண்மையில் ஒரு சர்ச்சையில் சிக்கினார். ரியல் எஸ்டேட் விவகாரம் தொடர்பாக பேசச் சென்ற இடத்தில், பாஜக., தென் சென்னை மாவட்டத் துணைத்தலைவரும் வழக்கறிஞருமான பிரேம் ஆனந்தின் முகத்தில் குத்தி, மூக்கை உடைத்தார் சந்தானம். அதை பாராட்டும் வகையில், “அடி கொடுத்த சந்தானத்திற்கே கையில் காயம் என்றால் அடி வாங்கிய நபருக்கு என்ன ஆகியிருக்கும்” என்று, சந்தானம் ஸ்டண்ட் போட்டது குறித்து ஆர்யா அவரை பாராட்டிப் பேசினார். அது தற்போது போலீஸ் பிரச்னையில் சிக்கியுள்ள சந்தானத்தை சற்றே நெளிய வைத்துள்ளது. 

ரியல் எஸ்டேட் பிரச்னை தொடர்பாக, சென்னை வளசரவாக்கத்தில் தனது தொழில் முறை கூட்டாளி சண்முக சுந்தரத்தின் கட்டுமான நிறுவனத்துடன் சேர்ந்து கோவூர் அருகே கட்டடம் கட்ட திட்டமிட்டு வேலையைத் தொடங்கியிருக்கின்றனர். ஆனால் சிஎம்டிஏ அனுமதி கிடைக்காத காரணத்தால், நீண்ட நாட்களாக இழுத்தடித்துக் கொண்டிருந்த பிரச்னையில் தான் கொடுத்த பணத்தை திருப்பிக் கேட்டிருக்கிறார் சந்தானம். அதற்கு சண்முக சுந்தரம் ஒரு பகுதியைக் கொடுத்துவிட, மீதப் பணத்தைப் பெறுவதில் சந்தானத்துக்கும் சண்முகசுந்தரத்துக்கும் தகராறு இருந்து வந்தது. 

இந்நிலையில், கடந்த திங்கள் கிழமை சண்முக சுந்தரத்திடம் பணத்தைக் கேட்டு மிரட்டப் போன இடத்தில் அவரது வழக்கறிஞர் பிரேம் ஆனந்த் இருந்துள்ளார். அவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டபோது, அவரின் மூக்கை உடைத்து ஸ்டண்ட் போட்டிருக்கிறார் சந்தானம். அப்போது அவரது கையிலும் லேசாகக் காயம் ஏற்பட்டதாம். இதை அடுத்து இருதரப்பும் மருத்துவமனைகளில் சேர்ந்து பின், போலிஸில் புகாரும் அளித்தனர். 

இதை அடுத்து, சந்தானம் மீது வளசரவாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து நடிகர் சந்தானத்தை தேடிவந்தனர். அதனால், தலைமறைவான சந்தானம், பின்னர் நீதிமன்றத்தை அணுகி முன் ஜாமீன் பெற்றார்.

இந்நிலையில் இன்று ‘சக்க போடு போடு ராஜா’ சினிமா விழாவில் நடிகர் சந்தானம், நடிகர் ஆர்யா ஆகியோர் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் பேசிய நடிகர் ஆர்யா, இந்தப் படம் ஒரு ஆக்சன் படம். நடிகர் சந்தானம் ஆக்‌சன் ஹீரோவாக எப்படி நடிப்பார் என்று யோசித்தேன். ஆனால், நடிகர் சந்தானம் நிஜமாகவே சண்டை போட்டு அதை நிரூபித்துள்ளார். அவர் ஆக்‌சன் ஹீரோவாகவே மாறிவிட்டார். நடிப்பில் மட்டுமல்ல நிஜ வாழ்க்கையிலும் சந்தானம் ஹீரோ தான். அதற்கு அவர் சமீபத்தில் காட்டிய ஆக்சனே போதும். அடிச்ச கைப்புள்ளைக்கே இந்த நிலைமைன்னா... அடி வாங்குனவன் நிலைமை? அடி கொடுத்த சந்தானத்திற்கே கையில காயம் என்றால்... அடிவாங்கிய நபருக்கு என்னவாகியிருக்கும்? என்று நடிகர் சந்தானத்தைப் பாராட்டிப் பேசினார். 

ஏற்கெனவே அடிதடியில் ஈடுபட்டு போலீஸ் கேஸாகி வம்பில் சிக்கியுள்ள சந்தானத்தை, ஏதோ பாராட்டியோ, நக்கல் அடித்தோ பேசுவதாக நினைத்து ஆர்யா வம்பில்தான் மாட்டி விட்டுள்ளார்.