திரையுலகை பொறுத்தவரை, வாரிசு நடிகர்கள் எளிதில் ரசிகர்கள் மனதில் இடம் பிடித்துவிட முடிவதில்லை. பல்வேறு போராட்டத்திற்கு பிறகு, அவர்களும் சிறந்த நடிகர்கள் என்று நிரூபித்தால் மட்டுமே மக்கள் அவர்களை ஏற்று கொள்கிறார்கள் .

அந்த வகையில், பழம்பெரும் நடிகர்... விஜயகுமாரின் மகன் என்கிற அடையாளத்தோடு 'முறை மாப்பிள்ளை' என்கிற படத்தின் மூலம் அறிமுகமானவர் அருண் விஜய். இதை தொடர்ந்து பிரியம், காத்திருந்த காதல், கங்கா கௌரி, போன்ற பல படங்களில் நடித்தார். சில படங்கள் ஓரளவு ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றாலும் இவரால் முன்னணி நடிகர் என்கிற இடத்தை பிடிக்க முடியவில்லை.

ஆனால் இவர் அஜித்துக்கு வில்லனாக கம் பேக் கொடுத்த 2015 ஆண்டு வெளியான 'என்னை அறிந்தால்' திரைப்படம் இவருக்கு பல விருதுகளை பெற்று தந்ததோடு, அஜித் ரசிகர்களின் அன்பையும் பெற்று தந்தது. இந்த படத்தை தொடர்ந்து இவர் மீண்டும் கதாநாயகனாக நடித்த குற்றம் 23, செக்க சிவந்த வானம், தடம் ஆகிய படங்கள் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்று வசூலிலும் சாதனை படைத்தது.

தற்போது அடுக்கடுக்காக, அக்னி சிறகுகள், பாக்சர், சினம், மாஃபியா, என நான்கு படங்களில் நடித்து வருகிறார். மேலும்  இவருடைய படங்களுக்கும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு ஏற்பட்டுள்ளது.

இன்று பிறந்தநாள் கொண்டாடும் இவருக்கு, சமூக வலைத்தளங்களில் அஜித் ரசிகர்கள் உட்பட பலர் தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள். ஏசியா நெட் சார்பாக அருண் விஜய்க்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்.