உலக நாயகன் கமல்ஹாசனின் பிறந்தநாளும் நவம்பர்-7 என்பது கவனிக்கத்தக்கது. யோகாசன ஆசிரியையாக அறியப்பட்ட அனுஷ்காவை, திரையுலகுக்கு மட்டுமல்ல ரசிகர்களுக்கும் அறிமுகப்படுத்தியது தெலங்கு தேசம்தான். 2005-ல் டோலிவுட் கிங் நாகர்ஜுனாவின் சூப்பர் படம் மூலம் திரையுலகில் அடியெடுத்து வைத்த அனுஷ்கா, முதல் படத்திலேயே தனது கட்டுடல் அழகையும், மனதை வசீகரிக்கும் நடிப்பையும் காட்டி ரசிகர்களை தன்பால் ஈர்த்தார். 


தொடர்ந்து, 2006ம் ஆண்டு மாதவனுக்கு ஜோடியாக இரண்டு படத்தின் மூலம் தமிழுக்கு அறிமுகமான அனுஷ்கா, அதன்பின், தெலுங்கு, தமிழ் என இரு மொழிகளிலும் மாறிமாறி நடிக்கத் தொடங்கினார்.
இரு மொழிகளிலும் முன்னணி ஹீரோக்களுடன் ஜோடி சேர்த்து அழகு பார்த்த திரையுலகம், அவரை, ஒரு கவர்ச்சி பாவையாகவே சித்தரித்தது. 

இதனால்,வழக்கமான ஒரு ஹீரோயினாகவே வலம் வந்த அனுஷ்காவுக்கு திருப்புமுனையை ஏற்படுத்திய படம்தான் அருந்ததி. 2009-ல் வெளியான இந்தப் படத்தில், இரட்டை வேடங்களில் அனுஷ்கா நடித்திருப்பார். அவரது முழு நடிப்புத்திறமையையும் அந்தப்படத்தில் வெளிப்படுத்தியிருப்பார். குறிப்பாக, அருந்ததி கேரக்டர் அனுஷ்காவிடமிருந்த அத்தனை திறமையையும் வெளிக்கொணர்ந்தது எனலாம். 

அதுவரை கவர்ச்சி நடிகையாகவே பார்க்கப்பட்ட அனுஷ்காவை, திரையுலகம் மிகச்சிறந்த நடிகையாக கொண்டாடத் தொடங்கியது. ரசிகர்கள் மனதிலும் அவர், அருந்ததியாகவே நிரந்தர இடத்தைப் பிடித்தார்.


அதன்பின்னர், அவரது திரைப்பயணத்தில் ஏறுமுகம்தான். தெலுங்கில் வேதம், பஞ்சாக்ஸ்ரி, கலிஜா, நாகவள்ளி மற்றும் தமிழில் வானம், தெய்வத்திருமகள், சிங்கம், சிங்கம்-2 என அனுஷ்கா நடித்த படங்கள் அனைத்தும் பாக்ஸ் ஆஃபிசில் பட்டைய கிளப்பின. 

இப்படி தமிழ், தெலுங்கு என மாறிமாறி முன்னணி ஹீரோக்களுடன் இணைந்து கமர்ஷியல் படங்களில் நடித்த அதேவேளை, அருந்ததி வெற்றி தந்த நம்பிக்கையில் ஹீரோயினுக்கு முக்கியத்துவம் உள்ள கதையை தேர்ந்தெடுத்து நடிப்பதிலும் அனுஷ்கா ஆர்வம் காட்டினார். ருத்ரமாதேவி, இஞ்சி இடுப்பழகி, பாகமதி ஆகிய படங்கள் அனுஷ்காவுக்காகவே எடுக்கப்பட்டன. 


ஆனால், இந்தப்படங்களையெல்லாம் தாண்டி அனுஷ்காவை திரையுலகின்  ராணியாக மகுடம் சூட்டிய படம் என்னவென்றால், அது பாகுபலிதான். 

இந்தப் படத்தில் பிரபாசுக்கு ஜோடியாக அனுஷ்கா நடித்த தேவசேனா கேரக்டர், ரசிகர்களை கொண்டாட வைத்தது. பாகுபலி படத்தின் இரு பாகங்களும் வெளியாகி வசூல் சாதனை படைத்ததுடன், அனுஷ்காவையும் புகழின் உச்சிக்கு கொண்டு சென்றது. கடந்த 14 வருடங்களில் 40க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள அனுஷ்கா, தற்போது, நிசப்தம் என்ற படத்தில் மட்டுமே நடித்து வருகிறார். 

ஹீரோயினை மையப்படுத்தி உருவாகும் இந்தப் படம் 5 மொழிகளில் தயாராகிறது. அனுஷ்காவின் பிறந்தநாளையொட்டி நிசப்தம் படத்தின் டீசரை வெளியிட்டு படக்குழு ரசிகர்களுக்கு விருந்து படைத்துள்ளது. இன்று 38-வது பிறந்தநாளை கொண்டாடும் அனுஷ்காவுக்கு, திரையுலக நட்சத்திரங்களும், ரசிகர்களும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். அவர்களுடன் நாங்களும் எங்களது பிறந்தநாள் வாழ்த்துக்களை அனுஷ்காவுக்கு தெரிவித்துக்கொள்வதில் மகிழ்ச்சியடைகிறோம்.