ஆயில் மசாஜ் எடுத்து கொண்டதன் விளைவாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக எஸ்.வி.சேகர்  பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

தமிழ் சினிமாவில் குணச்சித்திர வேடம் மற்றும் காமெடி வேடத்தில் நடித்த மிகவும் பிரபலமானவர் எஸ்.வி.சேகர். பாஜக கட்சியில் இணைந்து தீவிர அரசியலிலும் ஈடுபட்டு வருகிறார். அவ்வபோது சர்ச்சைக்கு பஞ்சம் இல்லாத வகையில் சில கருத்துக்களை கூறி சிக்கல்கள் சிக்கிக் கொள்வது இவரின் வழக்கம்.

சமூக வலைத்தளத்தில் மிகவும் ஆக்ட்டிவாக இருக்கும் இவர், தற்போது வெளியிட்டுள்ள ஒரு பதிவு தான் அனைவரையும் ஆச்சரியமடைய வைத்துள்ளது. பொதுவாக உடல் வலி மற்றும் ரிலாக்ஸ் செய்வதற்காக பலர் ஆயில் மசாஜ் எடுத்துக் கொள்வது வழக்கம். ஆனால், எஸ்.வி.சேகர் ஆயில் மசாஜ் செய்ததன் எதிரொலியாக, உடல் நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சென்னை ஆர்.ஏ.புரத்தில் உள்ள பிரபல தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சைக்கு பின்னர் குணமடைந்துள்ளார். இந்த திடீர் உடல்நல குறைவு குறித்து, எஸ்.வி.சேகர் கூறியுள்ளதாவது, இனிமேல் ஆயில் மசாஜ் எடுத்துக் கொள்ளவே மாட்டேன் என்றும், ஒவ்வொரு நாளும் ஒரு பாடம் கற்றுக்கொள்ள வேண்டி இருக்கிறது என தெரிவித்துள்ளார். தற்போது இவருடைய பதிவை கண்டு, ரசிகர்கள் மற்றும் பிரபலங்கள் விரைவில் பூரண நலமடைய தங்களின் வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.