’தாய் மீது சத்தியம்’, ‘ப்ரியா’ ஆகிய இரு தமிழ்ப்படங்களிலும், ‘கானம்’ என்ற ஒரே ஒரு மலையாளப்படத்திலுமாக மூன்றே வெளிமொழிப்படங்களில் நடித்திருக்கும் அம்பரீஷ், சினிமாவில் நண்பர்களுக்காக உயிரையே கொடுக்கக்கூடிய அபூர்வ மனிதர். அவர் மொத்தம் நடித்திருக்கும் 208 படங்களில் சம்பளம் வாங்காமல் கவுரவ வேடத்தில் நடித்த படங்கள் மட்டுமே இருபதைத் தாண்டும். 

துவக்கத்தில் நிறைய புரட்சிகரமான பாத்திரங்களில் நடித்ததால் கன்னட சினிமாவின் நிரந்தர ‘ரிபெல் ஸ்டார்’ அம்பரிஷ். 1991ம் ஆண்டு நடிகை சுமலதாவை திருமணம் செய்தார். சுமலதா பல்வேறு தமிழ் படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

1952ம் ஆண்டு மே மாதம் 29ம் தேதி கர்நாடக மாநிலம் மாண்டியா மாவட்டத்தில் உள்ள தொட்டரசினகெரே கிராமத்தில் பிறந்தவர் அம்பரீஷ். அவரின் இயற்பெயர் மளவாலி ஹச்சே கவுடா அமர்நாத். படத்திற்காக வைத்த பெயர் தான் அம்பரீஷ். காலப்போக்கில் அதுவே அவரின் நிரந்தர பெயராகிவிட்டது. அவர் 1972ம் ஆண்டு வெளியான தேசிய விருது பெற்ற நாகரஹாவு படம் மூலம் நடிகர் ஆனார். ’அபூர்வ ராகங்கள்’ வெளியாவதற்கு முன்பே ரஜினி ஸ்டைலில் சிகரட்டைத் தூக்கிப்போட்டு சினிமாவில் பிரபலமானவர் அம்பரிஷ்.

முதல் படத்தை அடுத்து அம்பரீஷ் சில காலம் வில்லன் மற்றும் குணச்சித்திர வேடங்களில் நடித்து வந்தார். அதன் பிறகு அவர் ஹீரோவாகி பல வெற்றிப் படங்களை அளித்துள்ளார். 1994ம் ஆண்டு சட்டசபை தேர்தலுக்கு முன்பு அவர் காங்கிரஸ் கட்சியில் சேர்ந்து பிரச்சாரம் செய்தார். அதன் பிறகு அவர் ஜனதா தள கட்சியில் சேர்ந்தார். 1998ம் ஆண்டு நடந்த பொது தேர்தலில் அவர் மாண்டியா தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.

சித்தராமையா முதல்வராக இருந்தபோது அம்பரீஷ் கர்நாடக மாநில வீட்டு வசதித் துறை அமைச்சராக இருந்தார். அவர் 2013ம் ஆண்டு மே மாதம் முதல் 2016ம் ஆண்டு ஜூன் மாதம் வரை அந்த பதவியில் இருந்தார். பின்னர் அவர் மீண்டும் காங்கிரஸ் கட்சியில் சேர்ந்து மாண்டியா தொகுதியில் இருந்து தேர்வு செய்யப்பட்டார். 14வது லோக்சபாவில் அவர் தகவல் மற்றும் ஒளிபரப்புத் துறை அமைச்சராக இருந்தார். காவிரி விவகாரம் தொடர்பாக அவர் தனது பதவியை ராஜினாமா செய்தார். ஆனால் அவரின் ராஜினாமா ஏற்றுக்கொள்ளப்படவில்லை.

2013ம் ஆண்டு தார்வாட் பல்கலைக்கழகம் அம்பரீஷுக்கு கவுரவ டாக்டர் பட்டம் வழங்கி கவுரவித்தது. இது தவிர அவர் தனது சிறப்பான நடிப்புத் திறமைக்காக மாநில அரசின் விருதுகள் மற்றும் ஃபிலிம்ஃபேர் விருதுகள் பல பெற்றுள்ளார். அம்பரீஷின் மனைவி சுமலதா பல்வேறு தமிழ் படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

ரஜினியுடன் தமிழில் இரண்டே படங்களில் நடித்திருந்தாலும் அவருக்கு மிகவும் நெருக்கமானவர் அம்பரிஷ். இருவரும் அடிக்கடி காட்டுப்பகுதிகளில் உள்ள தங்கள் பண்ணை வீடுகளில் தங்கி ஓய்வெடுப்பார்கள். 

இதைத்தெரிந்துகொண்ட சந்தன வீரப்பன் முதலில் கடத்த திட்டமிட்டிருந்தது ரஜினி, அம்பரிஷ் காம்பினேஷனைத்தான். இவர்கள் ஜஸ்ட் மிஸ்ஸாக துரதிர்ஷடவசமாக மாட்டியவர்தான் கன்னட சூப்பர் ஸ்டார் ராஜ்குமார்.