கன்னட நடிகர் புனித் ராஜ்குமாரின் மறைவுக்கு தல அஜித்குமார் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார்.
சென்னை: கன்னட நடிகர் புனித் ராஜ்குமாரின் மறைவுக்கு தல அஜித்குமார் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார்.

இந்திய திரையுலகத்துக்கு இன்று சோக தினம். காலை அப்படி ஒரு செய்தி இடியை விட கொடுமையான வெளியாகி இருக்காது. கன்னட திரையுலகின் முடிசூடா மன்னர் நடிகர் ராஜ்குமாரின் மகன்களில் ஒருவரான புனித் ராஜ்குமாருக்கு மாரடைப்பு என்று தகவல் வெளியானது.
ஒட்டு மொத்த கன்னட திரையுலகம் மட்டுமல்ல இந்திய திரையுலகமே பெங்களூரு நோக்கி திரும்பியது. ஆனால் அடுத்த சில மணி நேரங்களில் ஐசியூவில் இருந்த புனித் ராஜ்குமாரின் மரண செய்தி தான் எங்கும் ஒலித்தது.
ஒட்டுமொத்த திரையுலகமே ஒரு கணம் அதிர்ந்து கண்ணீரில் கரைய ஆரம்பித்தது. நம்ப முடியவில்லை, பொய்யாக இருக்க வேண்டும் என்று அவரது ரசிகர்களும், அபிமானிகளும் கண்ணீர்விட்டனர், சிலர் கடவுளிடம் முறையிட்டனர்.

ஆனால் மரண செய்தி பேரிடியாக சான்டல்வுட் தேசமே ஸ்தம்பித்து போனது. இத்தனைக்கு அவரது அண்ணனும் மற்றொரு மாஸ் நடிகருமான சிவராஜ்குமார் நடித்துள்ள பஜ்ராங்கி 2 என்ற படம் இன்று தியேட்டர்களில் ரிலீஸ்.
தமது உடன்பிறப்பின் படத்துக்காக கிட்டத்தட்ட 7 மணி நேரங்களுக்கு முன்னதாக வாழ்த்தும், மகிழ்ச்சியும் டுவிட்டரில் பகிர்ந்து கொண்டவர். 2 நாட்களுக்கு முன்னதாக தான் அதே படத்துக்கான விழா ஒன்றில் கலந்து கொண்டு அனைவரையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தினார்.

திரையுலக வாழ்க்கையில் அவரது கிடைத்த அனைத்துமே வெற்றிகரமாக அமைய கன்னட உலகின் ரசிகர்கள் மனதில் நீங்கா இடம்பிடித்தார். இந் நிலையில் இன்று காலை மாரடைப்பால் காலமானார். அவரது மறைவு அறிந்து அரசியல் தலைவர்கள், பல்வேறு திரையுலகத்தினர் தொடர்ந்து இரங்கல் தெரிவித்து வருகின்றனர். பிரதமர் மோடி விதி அவரை நம்மிடம் இருந்து பிரித்து கொண்டு போய்விட்டது என்றார்.
இளம் வயதிலேயே மறைந்தது பேரதிர்ச்சி என்று முன்னாள் முதலமைச்சர் எடியூரப்பா இரங்கல் தெரிவித்து இருந்தார். அவரது குடும்பத்துக்கும், கோடானு கோடி ரசிகர்களுக்கும் ஆழ்ந்த இரங்கலையும் அவர் கூறி இருந்தார்.
அவர் தவிர முதல்வர் முக ஸ்டாலின், திமுக எம்பி கனிமொழி, கமல்ஹாசன் உள்ளிட்ட தமிழக தலைவர்களும் ஆழ்ந்த இரங்கலை வெளியிட்டு இருந்தனர்.
கோலிவுட் மட்டுமல்லாது ஒட்டுமொத்த திரையுலகமே கன்னட நடிகர் புனித் ராஜ்குமாருக்கு ஆழ்ந்த இரங்கல் செய்தியை வெளியிட்டு வருகிறது. பிரபல நடிகர் சிரஞ்சீவி, பிரித்விராஜ், ஆர்யா, சரத்குமார், ராதிகா சரத்குமார், மகேஷ் பாபு, விஷால், போனி கபூர், மம்முட்டி என பலரும் ஆழ்ந்த இரங்கலை வெளியிட்டு உள்ளனர்.

நடிகைகள் வரிசையில், மஞ்சிமா மோகன், ஹன்சிகா, நிக்கி கல்ராணி, ரகுல் ப்ரித்தி சிங், குஷ்பு, அனுஷ்கா உள்ளிட்ட பலரும் ஆழ்ந்த அதிர்ச்சியையும், இரங்கலையும் தெரிவித்து இருந்தனர்.
அந்த வரிசையில் தல அஜித்குமாரும் நடிகர் புனித் ராஜ்குமார் மறைவுக்கு ஆழ்ந்த இரங்கல் செய்தியை வெளியிட்டு உள்ளார். இது தொடர்பாக அவரது மேனேஜர் சதிஷ் சந்திரா டுவிட்டரில் ஒரு பதிவை போட்டு இருக்கிறார்.
அந்த பதிவில் அவர் கூறி இருப்பதாவது: புனித் குமார் அவர்களின் துரதிருஷ்டவசமான இந்த மறைவை அறிந்து மிகவும் வருந்துகிறேன். இந்த தருணத்தில் அவரது குடும்பத்தினர், நண்பர்கள் உள்ளிட்டோர் துயரம் போக்க வலிமை பெறட்டும் என்று கூறி உள்ளார். இந்த பதிவில் மனைவி ஷாலினி அஜித்குமாரும் இரங்கல் தெரிவித்துள்ளதாக அவரது பெயரையும் சேர்த்தே பதிவை வெளியிட்டு உள்ளார்.
