இன்றைக்கு தமிழ் சினிமாவில் ‘ஆடி அடங்கும் வாழ்க்கையடா’ என்பது மற்ற யாருக்கும் பொருந்துகிறதோ இல்லையோ நடிகர் ஆதிக்கு மிகவும் பொருந்தும். ஏனென்றால் இரண்டே இரண்டு சுமார் ஹிட்டுகளைக் கொடுத்துவிட்டு அவர் ஆடும் ஆட்டம் தாங்க முடியவில்லை என்கிறார்கள். அதிலும் குறிப்பாக கதை சொல்ல அலையும் இளம் இயக்குநர்களை நாயாய் பேயாய் அலையவைப்பதில் பேரின்பமே காண்கிறாராம் ஆதி.

சுந்தர். சி தயாரிப்பில் ஹிப்ஹாப் தமிழா ஆதி நாயகனாக நடித்த ‘மீசையை முறுக்கு’ படம் 2017 ஆம் ஆண்டு வெளியாகி வெற்றி பெற்றது. இந்தப்படத்தை நாயகன் ஆதியே இயக்கியிருந்தார். அதையடுத்து அதே கூட்டணியில் உருவான படம் ‘நட்பே துணை’. இந்தப் படம் ஏப்ரல் 4, 2019 அன்று வெளியாகி வெற்றி பெற்றது. இந்தப்படத்தை புது இயக்குநர் பார்த்திபன் தேசிங்கு இயக்கியிருந்தார்.

இந்நிலையில் எவ்வித அறிவிப்பும் இன்றி ஹிப்ஹாப் தமிழா ஆதி நடிக்கும் மூன்றாவது படத்தின் படப்பிடிப்பு நடந்திருக்கிறது.இந்தப் படத்தை இயக்குநர் ஷங்கரின் உதவியாளர் ராணா ஜெகதீசன் என்பவர் இயக்குகிறார்.இப்படத்தின் படப்பிடிப்பு முப்பத்தைந்து நாட்கள் நடந்துள்ளதாம். படப்பிடிப்பு தொடங்கிய நேரத்தில் இயக்குநரை ஆகா ஓகோவெனப்[ புகழ்ந்து கொண்டிருந்தாராம் நாயகன் ஆதி.

படப்பிடிப்பு முடிந்து எடுத்த காட்சிகளைப் போட்டுப் பார்த்தபோது தமக்கு முக்கியத்துவம் இல்லாத மாதிரி இருக்கிறது என்று நினைத்த ஆதி, காட்சிகளை மாற்ற வேண்டும் என்றும், அஜித்,விஜய்க்கு வைப்பதுபோல் தனக்கு ஷாட் வைக்கவேண்டும் என்றும் சொன்னாராம். கதைக்குத் தேவையான காட்சிகளைத்தான் படமாக்கியிருக்கிறோம், மாற்றினால் சரியாக இருக்காது என்று இயக்குநர் சொல்லியிருக்கிறார்.ஆனாலும் எடுத்த காட்சிகளை மாற்றி திரும்பவும் எடுக்க வேண்டும் என்று பிடிவாதமாக இருக்கிறாராம் ஆதி. இதனால் இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளதாம். இதன் காரணமாக இந்த இயக்குநருக்குப் படம் எடுக்கவே தெரியவில்லை என்று பரப்புரை செய்யத் தொடங்கிவிட்டாராம் ஆதி.

இதயொட்டி மிகவும் நொந்துபோன இயக்குநர் ராணாவும் பதிலுக்கு ஆதியின் வண்டவாளங்களை உதவி இயக்குநர்களிடம் பரப்ப அவரிடம் கதை சொல்ல நெருங்கவே பயப்படுகிறார்களாம் அறிமுக இயக்குநர்கள்.