சமீபத்தில் ’சரக்கு’ கடத்திய சர்ச்சையில் சிக்கிய நடிகை ரம்யா கிருஷ்ணன், ‘தான் ஏன் தொடர்ந்து பாலிவுட்டில் நடிக்கவில்லை’என்பது குறித்து பதில் அளித்துள்ளார்.

'பாகுபலி' திரைப்படம் மூலம் தேசிய அளவில் கவனம் ஈர்த்தவர் நடிகை ரம்யா கிருஷ்ணன். தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி என நூற்றுக்கணக்கான திரைப்படங்களில் ரம்யா கிருஷ்ணன் நடித்துள்ளார். இந்தியில் 'கல்நாயக்', 'க்ரிமினல்', 'ஷபத்', 'படே மியான் சோடே மியான்' உள்ளிட்ட படங்களில் நடித்திருந்தாலும் தமிழ், தெலுங்கு அளவுக்கு அவர் இந்தியில் தொடர்ந்து நடிக்கவில்லை.

இதுபற்றி சமீபத்தில் ஒரு பேட்டியில் பேசியுள்ள ரம்யா கிருஷ்ணன், "நான் இந்திப் படங்களிலிருந்து இடைவெளி எடுத்துக்கொள்ளவில்லை. நான் நடித்த படங்கள் சரியாக ஓடவில்லை. வந்த வாய்ப்புகள் எனக்குப் பிடிக்கவில்லை. அதே நேரம் தென்னிந்தியத் திரைப்படங்களில் நான் நன்றாக வளர்ந்து வந்தேன். அதுவே காரணம்.

அமிதாப் பச்சனுடன் நடிக்கும் திரைப்படத்தின் படப்பிடிப்பு இன்னும் ஆரம்பிக்கவில்லை. அவர்களுக்குச் சில பிரச்சினைகள் உள்ளன என்று நான் நினைக்கிறேன். அதுபற்றி எனக்குத் தெரியாது. அடுத்து நான் நடித்து வரும் ஒரு தெலுங்கு - இந்திப் படத்தின் இணை தயாரிப்பாளர் கரண் ஜோஹர். பூரி ஜெகந்நாத் இயக்கத்தில் விஜய் தேவரகொண்டா, அனன்யா பாண்டே ஆகியோருடன் நடிக்கிறேன். அது கண்டிப்பாக 'பாகுபலி' அளவுக்கு இருக்கும். 50 சதவீதப் படப்பிடிப்பு முடிந்துவிட்டது. ஊரடங்கு முடிந்ததும் மீதிப் படப்பிடிப்பு நடக்கும்" என்று கூறியுள்ளார்.

சிவகாமி கதாபாத்திரத்தை மட்டும் தனியாக வைத்து ஒரு திரைப்படம் உருவானால் நடிப்பீர்களா என்ற கேள்விக்கு, "யாராவது ஒரு அப்படி ஒரு அற்புதமான கதையோடு வந்தால் ஏன் நடிக்க மாட்டேன் என்று சொல்லப் போகிறேன். சிவகாமி என்பது மிக வலிமையான கதாபாத்திரம். எனது திரை வாழ்க்கையில் மிகச் சிறந்த கதாபாத்திரங்களில் ஒன்று" என்று ரம்யா கிருஷ்ணன் கூறியுள்ளார்.