பிக்பாஸ் டைட்டில் வின்னர் ஆரி அர்ஜுனன் நடிக்கும் 'ரிலீஸ்' திரைப்படம் பூஜையுடன் துவங்கியது !!
பிக்பாஸ் டைட்டில் வின்னர், ஆரி நடிக்கும் திரில்லர் படத்தின் படப்பிடிப்பு இன்று பூஜையுடன் துவங்கியுள்ளது.
MANO CREATION சார்பில் தயாரிப்பாளர் ராஜா தயாரிப்பில், இயக்குநர் L R சுந்தரபாண்டி இயக்கத்தில், நடிகர் ஆரி அர்ஜுனன் கதாநாயகனாக நடிக்கும், பரபர திரில்லர் திரைப்படமான “ரிலீஸ்” படத்தின் படப்பிடிப்பு, இன்று படக்குழுவினர் கலந்துகொள்ள, எளிமையான பூஜையுடன், இனிதே துவங்கியது.
சென்னையின் மையப்பகுதி ஒன்றில், நடக்கும் பரபரப்பான சம்பவங்கள் தான் இப்படத்தின் கதை. அடுத்து என்ன நடக்கும் என்ற எதிர்பார்ப்பை எகிற வைக்கும் வகையில், ஆச்சரியப்பட வைக்கும் திருப்பங்களுடன், இதுவரை பார்த்திராத திரில்லர் அனுபவத்தை தரும் வகையில், இப்படத்தின் திரைக்கதையை அமைத்துள்ளார் இயக்குநர் L R சுந்தரபாண்டி.
இப்படத்தில் நாயகனாக நடிகர் ஆரி அர்ஜுனன் நடிக்கிறார், தீப்ஷிகா நாயகியாக நடிக்கிறார். இவர்களுடன் ஆராத்யா, இயக்குநர் சுப்ரமணிய சிவா, ஆதித்யா கதிர் ஆகியோர் முக்கிய பாத்திரங்களில் நடிக்கிறார்கள்.
இப்படத்திற்கு “போடா போடி, வெண்ணிலா கபடி குழு” படங்களின் ஒளிப்பதிவாளர் J லக்ஷ்மன் ஒளிப்பதிவு செய்கிறார். அநீதி, ஜெயில் மற்றும் மத்தகம் வெப் சீரிஸிற்கு கலை இயக்கம் செய்த சுரேஷ் கல்லேரி கலை இயக்கம் செய்கிறார். சாமி 2, பென்குயின், படங்களின் காஸ்ட்யூம் டிசைனர் திவ்யா இப்படத்திற்கு காஸ்ட்யூம் டிசைன் செய்கிறார். சென்னையை ஒட்டி, மஹேந்திரா சிட்டி பகுதியில் இப்படத்தின் முதல் கட்டப் படப்பிடிப்பை நடத்த படக்குழு திட்டமிட்டுள்ளது. படத்தின் ஃபர்ஸ்ட்லுக் மற்றும் படம் குறித்த மற்ற தகவல்கள் விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.