கடந்த ஐந்து ஆண்டுகளில் நாட்டை அதளபாதாளத்துக்குக் கொண்டு சென்ற பா.ஜ.க.வுக்கு வாக்களிக்கமாட்டோம். அவர்களை ஆட்சியிலிருந்து அகற்றக் கிடைத்திருக்கும் கடசி வாய்ப்பைத் தவறவிடவேண்டாம் என்ற கோஷத்துடன் திரையுலகக் கலைஞர்களால் ஒரு இணையதளம் துவங்கப்பட்டுள்ளது.

இயக்குனர்கள் வெற்றிமாறன், சனல்குமார் சசிதரண், ஆனந்த் பட்வர்தன் உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்ட இந்திய திரை படைப்பாளிகள் ‘Save Democracy’ எனும் பெயரில் இணைந்திருக்கின்றனர். அவர்கள் www.artistuniteindia.com தளத்தில் வெளியிட்டிருக்கும் அறிக்கையில் வரும் மக்களவைத் தேர்தலில் பா.ஜ.க விற்கு ஓட்டுப் போடவேண்டாம் என்று இந்திய மக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

பிரிவினைவாத மற்றும் வெறுப்பரசியலை வளர்த்தெடுப்பது, தலித்துகள், முஸ்லிம்கள் மற்றும் விவசாயிகளை தனிமைப்படுத்துவது, கலாச்சார மற்றும் விஞ்ஞான நிறுவனங்கள் அருகி வருவது, தணிக்கை கட்டுப்பாடுகளை இறுக்குவது போன்ற காரணங்களால்தான் பா.ஜ.க விற்கு எதிரான இந்த நிலைப்பாட்டை எடுத்துள்ளதாய் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

‘கலாச்சாரம் மற்றும் புவியியல் ரீதியாய் நாம் வேறுபட்டிருந்தாலும், எப்போதும் ஒற்றுமையாய் இருந்து வந்துள்ளோம். அந்த ஒற்றுமைக்கு இப்போது ஆபத்து வந்துள்ளது. வரும் மக்களவைத் தேர்தலில் புத்திசாலித்தனமான முடிவெடுக்காவிட்டால் பாசிசம் நம்மை கடுமையாக தாக்கும் ஆபத்து உள்ளது.பா.ஜ.க கொடுத்த தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில் பரிதாபமாக தோற்றுள்ளது. இதனால் பசு பாதுகாப்பு வன்முறைகளையும் கும்பல் மனோபாவங்களையும் வளர்த்து நாட்டை பிளவுபடுத்தும் முயற்சிகளில் இறங்கியுள்ளது.

லேசான எதிர்ப்பை வெளிப்படுத்துபவர்கள் கூட தேசத் துரோகிகள் என முத்திரை குத்தப்படுகின்றனர். தேசபத்தியை ட்ரம்ப் கார்டாக பயன்படுத்தி தங்கள் வாக்கு வங்கியை வளர்த்துக் கொள்கின்றனர். ராணுவத்தையே தங்கள் தேர்தல் உத்தியாக பயன்படுத்தி, நாட்டை போரில் ஈடுபடுத்தும் சூழலை உருவாக்கும் அளவிற்கு இது வளர்ந்துள்ளது’ என்றும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.