‘பிகில்’கதைத் திருட்டு தொடர்பாக தமிழ்ப்பட உதவி இயக்குநர் கொடுத்த புகார் ஒரு முடிவிற்கு வந்துள்ள நிலையில் ஆந்திராவிலிருந்து ஒரு புயல் மிகத் தீவிரமாக இயக்குநர் அட்லியை நோக்கி மையம் கொள்ள ஆரம்பித்துள்ளது. இதனால் இப்படம் ஆந்திராவில் ரிலீஸாகுமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

ஐதராபாத்தைச் சேர்ந்த நந்தி சின்னி குமாரும் தெலுங்குத் திரையுலகின் எழுத்தாளர் சங்கத்தில் ’பிகில்’ கதை சம்பந்தமாக புகார் ஒன்றை அளித்துள்ளார்.அவர் அளித்துள்ள விரிவான புகார் கடிதத்தில்….நான், அகிலேஷ் பால் என்பவரின் வாழ்க்கைச் சம்பவங்களை அடிப்படையாகக் கொண்ட ஸ்லம் சாக்கர் என்கிற திரைக்கதைக்கு நான் தெலங்கானா எழுத்தாளர்கள் கூட்டமைப்பிடம் காப்புரிமை பெற்றுள்ளேன். தேதி 11/07/18. அகிலேஷ் பால் வாழ்க்கைக் கதையை அனைத்து மொழிகளிலும் படமாக்க நான் ஒட்டுமொத்த காப்புரிமை பெற்றுள்ளேன். ஆமிர் கான் ஷோவான ‘சத்யமேவ ஜெயதே’வில் அகிலேஷ் பால் தோன்றினார். ‘ஸ்லம் சாக்கர்’ நிறுவனரும் சேரிப்பகுதி குழந்தைகளின் ஊக்கியாகச் செயல்பட்டவருமான விஜய் பார்ஸ் என்பவரை அழைத்து அதே ஷோவில் அகிலேஷ் பால் கதையை விவரிக்குமாறு அமீர் கான் செய்தார்.

இந்நிலையில்தான் நான் பாலிவுட், டோலிவுட்டில் உள்ள முக்கிய ஸ்டுடியோக்கள், தயாரிப்பு நிறுவனங்களை அணுகி காப்புரிமை பெற்ற அகிலேஷ் பால் கதையை முழுநீளப் படமாக்க அணுகினேன். இது தொடர்பான செய்திகளும் கட்டுரைகளும் இணையதளத்தில் வெளியாகின. மார்ச் 21, 2018-ல் முன்னணி ஆங்கிலப் பத்திரிகைகள் ‘ஸ்லம் சாக்கர்’ வீரர் வாழ்க்கைச் சித்திரப் படத்தை நந்திகுமார் இயக்குகிறார்’ என்ற தலைப்பில் செய்தி வெளியிட்டன.

இந்நிலையில்தான் ஏஜிஎஸ் தயாரிப்பில் ‘பிகில்’ என்ற படம் விஜய், நயன்தாரா நடிப்பில் அட்லீ இயக்கத்தில் வெளியாவதாக செய்திகள் வெளியாகின. பிகிலின் போஸ்டர்கள், ட்ரெய்லர், டீஸர் வெளியாகின. மேலும் சமூக வலைதளம், அச்சு ஊடகம், இணையதளங்கள் என்று இதன் கதை பரவலானது. அதில் ‘பிகில்’ படத்தின் முக்கியக் கதாபாத்திரம் கால்பந்து வீரர் மற்றும் கேங்ஸ்டர் என்ற இரட்டை ரோலில் சித்தரிக்கப்பட்டுள்ளதாக செய்தி வெளியானது. இதன் பின்னணி சேரி, வன்முறை மற்றும் குற்றம். கோச், பெண் ஒருவரை பயிற்சி அளித்து கால்பந்து வீராங்கனையாக்குகிறார். அவர் கால்பந்து போட்டியில் பங்கேற்கிறார், என்ற கதையமைப்பு தெரியவந்தது, இது தெளிவாக காப்புரிமை மீறல் என்பதை எங்களுக்குத் தெளிவுபடுத்தியது. எனது அகிலேஷ் பால் கதைக்கும் ‘பிகில்’ கதைக்கும் உள்ள அப்பட்டமான ஒற்றுமை தெரியவந்தது.

‘சத்யமேவ ஜெயதே’ ஷோவில் வெளியான அகிலேஷ் பால் கதையை நிச்சயம் ‘பிகில்’ குழுவினர் அறிந்தேயிருக்கின்றனர். ஏனெனில் எனது காப்புரிமை பெற்ற திரைக்கதை அனைத்து ஊடகங்களிலும் சமூக வலைதளங்களிலும் இணையதளங்களிலும் வலம் வந்தது. எனவே எனது ‘ஸ்லம் சாக்கர்’ திரைக்கதை திருடப்பட்டுள்ளது.இது தொடர்பாக நான் ‘பிகில்’ தயாரிப்பு நிறுவனம், இயக்குநர் அட்லீயின் மேனேஜர், நடிகர் விஜய்யின் மேனேஜர், ‘பிகில்’ படத்தின் எக்ஸிகியூட்டிவ் தயாரிப்பாளர் என்று அனைவரிடமும் தொலைபேசி, மெசேஜ், வாட்ஸ் அப் என்று தொடர்பு கொள்ள முயற்சித்தேன்.

அகிலேஷ் பால் கதைக்கான எனது காப்புரிமை, இது தொடர்பாக வெளியான ஊடகச் செய்திகள், கட்டுரைகள் என நான் அனைத்தையும் பகிர்ந்தேன். விளக்கம் கேட்டேன். ஆனால் ஒரு பதிலும் கிடைக்கவில்லை.இந்நிலையில் என்னுடைய திரைக்கதையை ஒத்திருக்கும் ‘பிகில்’ படத்தின் குழுவினர் பேரமைதி காப்பது எனக்கு கவலையையும் அதிர்ச்சியையும் அளிக்கிறது. மேலும் ஏற்கெனவே இயக்குநர் அட்லீ, நடிகர் விஜய் ஆகியோர் பல கதைத் திருட்டுப் புகாரில் சிக்கியுள்ளதையும் நான் அறிந்தேன். தற்போது கூட கே.பி.செல்வா ‘பிகில்’ கதைத் திருட்டு தொடர்பாக வழக்கு தொடர்ந்துள்ளார்.

ஆகவே திரைத்துறையில் எந்த நடிகரும் தயாரிப்பாளரும் இயக்குநரும் மற்றொருவரின் படைப்புகளைத் துஷ்பிரயோகம் செய்யலாகாது. அதுவும், “இந்தப் படத்தில் வரும் கதாபாத்திரங்கள், சம்பவங்கள் ஒரு கற்பனையே, உயிருடன் இருப்பவர் அல்லது இறந்து போனவரின் வாழ்க்கையுடன் ஒற்றுமை கொண்டிருந்தால் அது தற்செயலே” என்று ஒரு தப்பித்தல்வாத உரிமைத் துறப்பை வெளியிட்டு தங்கள் கதைத் திருட்டை மூடி மறைக்கக் கூடாது.

எனவே, நான் என் தரப்பிலான உரிமைத் துறப்பை இவ்வாறாக ‘பிகில்’ படக்குழுவை எச்சரிப்பதற்காக இணையதளங்களில், ஊடகங்களில் வெளியிடவுள்ளேன்.“பிகில் படத்தில் வரும் சம்பவங்கள் கதாபாத்திரங்கள் காப்புரிமை பெற்ற அகிலேஷ் பால் என்பவரின் வாழ்க்கையான ‘ஸ்லம் சாக்கர்’ என்ற எனது திரைக்கதையைப் போலவே அப்படியே உருவ ஒற்றுமை கொண்டது. எனவே இது கற்பனையானதோ, தற்செயலானதோ அல்ல. மாறாக உண்மையானது, நோக்கப்பூர்வமானது”.‘பிகில்’ படத்தை நிறுத்துவதற்காக நோட்டீஸ் அனுப்ப உள்ளேன். ‘ஸ்லம் சாக்கர்’ என் முதல் படம். எனவே என் ஆசையை நிராசையாக்குமாறு இந்தக் காப்புரிமை மீறல் விவகாரம் நடைபெற்றுள்ளது. எனவே தெலங்கானா எழுத்தாளர் கூட்டமைப்பு இது தொடர்பாக விரைந்து செயல்பட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும்’என்று அந்தப் புகார் கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.