படம் ரிலீஸாக இன்னும் சரியாக இரண்டு தினனங்களே உள்ள நிலையில் ‘சூப்பர் டீலக்ஸ்’ படத்தில் நடிகர் விஜய் சேதுபதி சுமார் 35 நிமிடங்கள் மட்டுமே வருகிறார் என்ற அதிர்ச்சி தகவல் பரபரப்பாக பரவி வருகிறது. 2 மணிநேரம் 55 நிமிடங்கள் ஓடும் ஒரு படத்தில் வெறும் 35 நிமிடங்கள் மட்டுமா விஜய் சேதுபதி என்று அவரது ரசிகர்கள் அதிர்ந்து போயுள்ளனர்.

இயக்குநர் தியாகராஜன் குமாரராஜா இயக்கத்தில் அவரது ‘ஆரண்ய காண்டம்’’ ரிலீஸுக்குப்பின் எட்டு ஆண்டுகால இடைவெளிக்குப் பின் வெளியாகும் படம் ‘சூப்பர் டீலக்ஸ்’. விஜய் சேதுபதி திருநங்கை வேடத்தில் நடித்துள்ள இப்படத்தில் ஃபகத் ஃபாசில், சமந்தா, இயக்குநர் மிஷ்கின், நடிகை ரம்யா கிருஷ்ணன் உட்பட பலர் நடித்திருந்தாலும் விளம்பரங்களில் விஜய் சேதுபதியே அதிகம் முன்னிலைப்படுத்தப் படுகிறார்.

இந்நிலையில் இன்று காலை முதல் வலைதளங்களில் செம ஹாட்டாகப் பரவி வரும் செய்தி ஒன்று இப்படத்தில் விஜய் சேதுபதி 35 நிமிடங்கள் மட்டுமே வருகிறார் என்பதாகப் பரவி வருகிறது. இதற்கு முன்பு ‘சீதக்காதி’ பட விளம்பரங்களிலும் சுமார் அரை மணி நேரமே வந்த விஜய் சேதுபதியை முழுக்க முழுக்க ஹீரோவாக சித்தரிக்கப்பட்டதால் அப்படம் படுதோல்வியைத் தழுவியது.

‘சூப்பர் டீலக்ஸ்’ படம் குறித்த இச்செய்தி உண்மையா அல்லது அவரது எதிரிமுகாமால் பரப்பப்பட்டு வருகிறதா என்பது தெரியவில்லை. அது ஒருபுறமிருக்க இது முழுக்க முழுக்க இயக்குநர் தியாகராஜன் குமாரராஜாவின் படம் என்பதே உண்மை.