சென்னை உயர்நீதி மன்றத்தில் பாடல்களின் ராயல்டி தொடர்பாக வழக்கு தொடுத்திருக்கும் ஆறு தயாரிப்பாளர்களில் ஒருவர் கூட இளையராஜாவுடன் பணியாற்றவில்லை. அவர்கள் ஒரு விளம்பர நோக்கில்தான் இசைஞானியை வம்புக்கு இழுக்கிறார்கள்’ என்கிறார் ராஜாவின் இசைக்காப்பீடு தொடர்பான ஆலோசகர் பிரதீப் குமார்.

நடிகர் விஜயின் பினாமி தயாரிப்பாளர் பி.டி.செல்வக்குமார், ஆர்.சந்திரசேகர் உட்பட்ட ஆறு தயாரிப்பாளர்கள் நேற்று முன் தினம் சென்னைஉயர்நீதிமன்றத்தில் இசையமைப்பாளர் இளையராஜா மீது ஒரு வழக்கு தொடுத்தனர். அதில் இளையராஜா தமிழ்த்திரைப்பட பாடல்களின்  மூலம் இதுவரை 400 கோடிக்கும் மேல் சம்பாதித்திருப்பதாகவும் அதில் பாதியான 200 கோடியை தயாரிப்பாளர் சங்கத்துக்கு வழங்கவேண்டும் என்றும் கோரியிருந்தனர்.

அந்த வழக்கு குறித்து பதிலளித்த ராஜாவின் இசைக்காப்புரிமை ஆலோசகர் இ.பிரதீப் குமார்,’ ராயல்டி என்ற பெயரில் இதுவரை ஒரு நயா பைசா கூட சம்பாதிக்காத இளையராஜாவிடம் அவர்கள் 200 கோடி கேட்பது கேலிக்கூத்தாக உள்ளது. அவர் ராயல்டி பெற்றதற்கான ஒரே ஒரு ஆதாரத்தையாவது அவர்கள் காட்டமுடியுமா?

மேற்படி ஆறுபேரில் ஒருவர் கூட இளையராஜா இசையில் படம் தயாரித்ததில்லை. எனும்போது இவர்கள் எதில் பங்கு கேட்கிறார்கள் என்றே விளங்கவில்லை. வீணாக இல்லாத பிரச்சினை ஒன்றைக் கிளப்பி அதில் விளம்பரம் தேடுவது ஒன்று மட்டுமே இவர்கள் நோக்கமாக இருக்கிறது. ஏதோ இளையராஜாவால் தயாரிப்பாளர்கள் நஷ்டம் அடைந்தது போல் கிளப்பி விடுகிறார்களே, இதே இளையராஜாவின் இசையால் 100 நாட்கள்,சில்வர் ஜூப்ளி படங்கள் எத்தனை என்று மக்களுக்குத் தெரியும்’ என்கிறார் பிரதீப்.

இளையராஜாவின் ராயல்டி பஞ்சாயத்துகள் குறித்து இவ்வளவு விவாதிக்கப்படும் வேளையில் ஏ.ஆர்.ரகுமான் இசை ராயல்டிகள் குறித்து எந்த சர்ச்சையும் எழுவதில்லையே ஏன் தெரியுமா? ரகுமான் ஒரு படத்துக்கு ஒப்பந்தமாகும்போது, தான் இசையமைக்கும் படத்துக்கான ஏகபோக உரிமைகளையும் the complete Intellectual Property என்ற பெயரில் எழுதி வாங்கிக்கொண்டுவிடுவார். ஆக இந்த சாமர்த்தியத்தை இனியாவது இளையராஜா ரகுமானிடமிருந்து கற்றுக்கொள்ளவேண்டும்.