‘இசைப் புயல்’ ஏ.ஆர்.ரகுமானையும், தெலுங்குத் திரையுலகின் முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவருமான கீரவாணியையும் வம்புக்கிழுத்து தேவையில்லாத சர்ச்சையில் சிக்கிக்கொண்டு விழி பிதுங்கியிருக்கிறார் இசையமைப்பாளர் தமன். 

2003ம் ஆண்டு ‘பாய்ஸ்’ படத்தில் நடிகராக ஷங்கரால் அறிமுகப்படுத்தப்பட்டு 2008ல் ‘சிந்தனை செய்’ படத்தின் மூலம் இசையமைப்பாளர் அவதாரம் எடுத்தவர் தமன். தமிழில் ஒன்றிரண்டு படங்களுக்கு இசையமைத்துவிட்டு, பின்னர் தாக்குப்பிடிக்கமுடியாமல் தெலுங்கில் தஞ்சமடைந்த தமனுக்கு அங்கு ஓரளவுக்கு வரவேற்பு இருந்தாலும், தான் ஏற்கனவே இசையமைத்த பாடல்கள் உட்பட எல்லாப் பாடல்களையும் கொஞ்சமும் மனசாட்சி இன்றி காப்பி அடிப்பவர் என்ற நல்ல பெயர் உண்டு. 

இந்த விமர்சனங்களை இந்தக்காதில் வாங்கி அந்தக்காது வழியாக அனுப்பு ரோஷப்படாமல் காலம் தள்ளி வந்த தமன் நேற்று தனது லேட்டஸ்ட் ரிலீஸான’அரவிந்த் சமேதா’ பட விழாவில் சற்றே உணர்ச்சிவசப்பட்டார். விழாவில் கலந்துகொண்ட நிருபர் ஒருவர் ‘அரவிந்த் சமேதா’ பட டியூனெல்லாம் நம்ம சொந்த டியூன் தான தமன்’ என்று டபுள் மீனிங்கில் கேள்வி கேட்டதும், ‘இந்த மாதிரி நீங்க ஏ.ஆர்.ரகுமான் கிட்டயும், கீரவாணிகாரு கிட்டயும் கேப்பீங்களா? என்று அனலாய்க் கொதித்தார். 

விட்டால் ரகுமானும் கீரவாணியும் எந்தெந்த பாடல்களை எங்கிருந்து சுட்டார்கள் என்ற பட்டியலை தமன் வெளியிட்டாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை என்கிறார்கள் தமனின் கோபத்தைக் கண்டவர்கள்.