ஒரே நேரத்தில் தமிழ்,தெலுங்கு, இந்தி மொழிகளில் வெளியாகவுள்ள  ‘அவெஞ்சர்ஸ் எண்ட் கேம்’ ஹாலிவுட் திரைப்படத்தில் இடம்பெறும் சிறப்பு பாடல் ஒன்றுக்கு இசையமைக்க ஏ.ஆர்.ரஹ்மான் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

’அவெஞ்சர்ஸ்’ படத்தின் 4-ம் பாகமாக ஏப்ரல் 26-ம் தேதி வெளியாக உள்ள படம் ’அவென்சர்ஸ் எண்ட் கேம்’. ’அயர்ன்மேன்’, ’தோர்’, ’கேப்டன் அமெரிக்கா’, ’ஸ்பைடர்-மேன்’ எனப் பல படங்களின்  சூப்பர் ஹீரோக்கள் ஒன்று சேர்ந்துள்ள படம் தான் ’அவெஞ்சர்ஸ்’. இதற்கு முந்தைய பாகத்தில் ஒரு சொடக்கில், உலகில் இருந்த பாதி உயிர்களை தானோஸ் அழிப்பதோடு கதை முடிந்தது. இந்நிலையில் ’அவெஞ்சர்ஸ் எண்ட் கேம்’ படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

தமிழில் மொழி மாற்றம் செய்யப்படும் இந்தப் படத்திற்கு இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் வசனம் எழுத ஏற்கெனவே ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். தனது பணியை ஏற்கனவே முடித்த முருகதாஸ் அதை தனது ட்விட்டர் பக்கத்திலும் ஷேர் செய்திருந்தார்.

இந்நிலையில் படத்தில் இடம்பெறும் சிறப்பு பாடலுக்கு இசையமைக்க ஏ.ஆர்.ரஹ்மான் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இந்தப் பாடல் தமிழ், தெலுங்கு, ஹிந்தி என மூன்று மொழிகளிலும் தயாராகிறது. ஏப்ரல் 1-ம் தேதி இந்தப் பாடல் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதுகுறித்து ஏ.ஆர்.ரஹ்மான், ‘என்னுடைய குடும்பத்திலேயே ’அவெஞ்சர்ஸ்’ படத்திற்கு நிறைய ரசிகர்கள் இருக்கிறார்கள். படத்திற்காக பாடல்களை இசையமைப்பது சவாலாக இருக்கிறது. நிச்சயம் அனைவரையும் கவரும் என நம்புகிறேன்’ என்கிறார்.