’இந்தியன் 2’ படத்துக்கு நான் இசையமைக்கவேண்டும் என்பதில் கமல் மிக ஆர்வமாக இருந்தார். ஆனால் இயக்குநர் ஷங்கரின் மனதில் வேறு ஏதோ திட்டம் இருந்ததால் அவர் என்னைத் தொடர்பு கொள்ளவே இல்லை. மற்றபடி அப்படத்துக்கு நான் இசையமைக்கத் தயாராகவே இருந்தேன்’ என்கிறார் இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான்.

‘இந்தியன்’ படத்துக்கு இசை அமைப்பாளராகப் பணிபுரிந்தவர் ஏ.ஆர்.ரஹ்மான். அந்த படத்தின் பாடல்கள் அனைத்துமே பெரும் வரவேற்பைப் பெற்றது. இந்தியன் 2-ம் பாகத்தில் ஏ.ஆர்.ரஹ்மான் பணிபுரியாதது குறித்து ஏகப்பட்ட தகவல்கள் நடமாடின. ஆனால் அதுகுறித்து ரஹ்மானோ ஷங்கரோ கருத்து எதுவும் சொல்லாமல் இருந்த நிலையில் தனது மவுனத்தைக் கலைத்திருக்கிறார் ரஹ்மான்.

‘இந்தியன் 2’வில் நான் பணியாற்ற வேண்டும் என்று கமல் தொடர்ந்து கேட்டுக்கொண்டேதான் இருந்தார். ஆனால் இதுகுறித்து ஷங்கர் என்னிடம் தொடர்புகொள்ளவே இல்லை. நான் இசையைமைக்க விரும்பினால் டைரக்டர் சொல்லவேண்டும் என்று கூறினேன். ‌ஷங்கர் எப்போதுமே புதிய வி‌ஷயங்களை தேடிச் செல்வார். தொடர்ந்து வேலை செய்து கொண்டிருந்தால் போர் அடித்துவிடும் இல்லையா? ஏற்கனெவே ‘அந்நியன்’, ‘நண்பன்’ ஆகிய படங்களைப் போல இது ஒரு சிறிய பிரேக். அவ்வளவுதான்’ என்று பதிலளித்திருக்கிறார் ரஹ்மான்.

இதன் மூலம் கமலைக் கலந்தாலோசிக்காமல் இயக்குநர் ஷங்கர் ‘இந்தியன் 2’ வுக்கு அனிருத்தை கமிட் பண்ணியிருப்பது தெரியவந்திருக்கிறது. கமான் ஸ்டார்ட் மியூசிக்.