ரஜினியை வைத்து அடுத்து ஏ.ஆர். முருகதாஸ் இயக்கும் படத்துக்கு ‘நாற்காலி’ என்று பெயர் வைத்து, அதன் கத, திரைக்தையை எழுதி, ரஜினி அதில் போலீஸ் கமிஷனராக நடிக்கிறார் என்பது உட்பட ஏகப்பட்ட தகவல்கள் நிலவி வரும் நிலையில், வதந்தியாளர்களின் அடிமடியிலேயே கைவைப்பது போல் என் அடுத்த படத்தின் பெயர் நாற்காலி இல்லை என்று ட்விட் போட்டு அனைவரையும் காலி செய்திருக்கிறார்.

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் கடந்த வருடம் தீபாவளி தினத்தில் வெளியான படம் ‘சர்கார்’. விஜய் நாயகனாக நடித்த இப்படம் கதைத்திருட்டு, அரசியல்வாதிகளின் எதிர்ப்பால் மறுசென்சார் என்று பரபரப்பாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இப்படத்தின் வெற்றிக்குப் பிறகு ரஜினியை வைத்து படம் இயக்க இருக்கிறார் ஏ.ஆர்.முருகதாஸ் என்று செய்திகள் வந்த நிலையில், அதற்கு கண், காது, மூக்கு, நாக்கு வைத்து பல கிளைக்கதைகள் கிளம்பின.

இப்படம் அரசியல் கதையாக இருக்கும் என்றும், படத்துக்கு ‘நாற்காலி’ என்று தலைப்பு வைப்பதாகவும் செய்திகள் வெளியானது. இதனை படக்குழுவினர் உறுதிப்படுத்தாத நிலையில், சற்றுமுன்னர் தனது ட்விட்டர் பக்கத்தில் இயக்குனர் முருகதாஸ், ‘நான் அடுத்ததாக இயக்கும் படம் ‘நாற்காலி’ இல்லை, தயவு செய்து வதந்திகளைப் பரப்ப வேண்டாம்’ என்று சுருக்கமாக தந்தி அடித்துவிட்டுத் தப்பி ஓடிவிட்டார். 

சரி, டைட்டில்தான் இல்ல. படத்துல ரஜினியாவது இருக்காரா ராசா?...