டைட்டில் பஞ்சம் தலைவிரித்தாடும் தமிழ் சினிமாவில் ‘ஒரு குப்பைக் கதை’ என்ற படத்தில் நாயகனாக அறிமுகமான பிரபல டான்ஸ் மாஸ்டர் தினேஷ் நடிக்கும் படத்திற்குத்தான் இவ்வளவு வினோதமாக ‘நாயே பேயே’ என்று பெயர் சூட்டியிருக்கிறார்கள்.

‘மனதைத் திருடி விட்டாய்’ படத்தின் மூலம் 2001ல் டான்ஸ் மாஸ்டராக அறிமுகமான தினேஷ் இதுவரை 200க்கும் மேற்பட்ட படங்களில் பணியாற்றியிருக்கிறார். அவ்வப்போது ஒரு பாடலுக்குத் தலைகாட்டி வந்த தினேஷ் கடந்த ஆண்டு ‘ஒரு குப்பைக் கதை’ படத்தின் மூலம் கதாநாயகனாக அவதாரம் எடுத்தார்.

நல்ல விமர்சங்களைப் பெற்ற அப்படம் பெரிய அளவில் வசூலிக்கவில்லை. இந்நிலையில் அவர் மீண்டும் நாயகனாக நடிக்கும் படத்துக்குத்தான் ‘நாயே பேயே’ நாமகரணம்.இவருடன் இணைந்து கதாநாயகியாக ஐஸ்வரியா நடிக்க, இவர்களுடன் ஆடுகளம் முருகதாஸ், ஷாயாஜி ஷிண்டே, ரோகேஷ், கிருஷ் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கிறார்கள்.

நகரத்தில் வாழும் ஒரு துடிப்பான இளைஞன், மனம் போன போக்கில் தன்வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருக்கிறான். நிரந்தர வேலையில் இல்லாத அவன்,அவ்வப்போது சமயோசிதமாக சிறு சிறு திருட்டுகளில் ஈடுபட்டு, அதில் கிடைக்கும் பணத்தில் நண்பர்களுடன் சந்தோஷமாக இருக்கின்றான்.இந்தச்சூழலில், அவனுக்கு ஒரு பிரம்மாண்டமான ஐடியா உதிக்க, அந்த ஒரே ஒரு ஜாக்பாட் திருட்டுடன், வாழ்க்கையில் செட்டிலாக முடிவு செய்கிறான்.

அந்தத் திருட்டில் ஒரு பணக்கார வீட்டு நாயைத் திருடுவதற்குப் பதிலாக பேயைத் திருடிவிட்டு, அந்தப் பேயிடம் அவர் நாய் பாடு படுவதுதான் கதையாம்.இப்படம் பார்த்து ரசிகர்கள் என்னபாடு படப்போகிறார்கள் என்பதை நினைத்தால்தான் கவலையாக இருக்கிறது.