இன்று தமிழ்,தெலுங்கு, இந்தி ஆகிய மூன்று மொழிகளில் ஒரே நேரத்தில் ரிலீஸாகும் பிரபாஸின் ‘சாஹோ’படத்துக்கு பேனர் கட்டிய தீவிர ரசிகர் ஒருவர் மின்சாரம் தாக்கி தியேட்டர் வாசலிலேயே உயிரிழந்தார். பெரும் கொண்டாட்டத்திலிருந்த பிரபாஸ் ரசிகர்களை இச்செய்தி துக்கத்தில் ஆழ்த்தியுள்ளது.

சுஜித் இயக்கத்தில் பிரபாஸ், ஷ்ரத்தா கபூர், அருண் விஜய் உள்ளிட்டோர் நடித்த படம் சாஹோ. சுமார் 300 கோடி பட்ஜெட்டில் உருவாகி இருக்கும் இப்படம் இன்று உலகம் முழுவதும் வெளியாகியுள்ளது. ’பாகுபலி’ படத்துக்கு பின்னர், நீண்ட இடைவெளிக்குப்பின் இந்த படம் வெளியாவதால் திரையரங்குகளில் பிரபாஸ் ரசிகர்கள் பேனர்கள், கட் அவுட்கள் என்று கொண்டாடி வருகிறார்கள். ரசிகர்கள் கொண்டாட இரவு 1 மணிக்கே காட்சி போடலாம் என அரசு அனுமதி அளித்துள்ளது.

இந்நிலையில் தெலுங்கானா பகுதியில் உள்ள தியேட்டர் ஒன்றில், நேற்று இரவு பிரபாஸ் ரசிகர்கள் மிக பிரம்மாண்டமான முறையில் பேனர்களும் கட் அவுட்களும் வைத்து அலங்கார வேலைகளில் ஈடுபட்டு வந்தனர். அச்சமயம் தியேட்டரின் முன்பகுதியில் இருந்த மிக உயரமான கட் அவுட் ஒன்றுக்கு மாலை அணிவித்துக்கொண்டிருந்த ரசிகர் மின்சார வயர் ஒன்றில் தவறுதலாகக் கைவைத்தார். உடனே ஷாக் அடிக்க கட் அவுட்டின் உச்சியிலிருந்து விழுந்த அவர் ஸ்பாட்டிலேயே உயிரிழந்தார். தியேட்டர் ஊழியர்கள் உடனே போலீஸுக்குத் தகவல் கொடுக்க அவர்கள் சடலத்தைக் கைப்பற்றி விசாரணை நடத்திவருகின்றனர். ‘பாகுபலிக்குப் பின்னர் பெரும் கொண்டாட்ட மனநிலையிலிருந்த பிரபாஸ் ரசிகர்களை இச்செய்தி பெரும் துக்கத்தில் ஆழ்த்தியுள்ளது.