அஜீத்,விஜய் ரசிகர்களின் கட் அவுட் பாலாபிஷேக வெறித்தனத்தையெல்லாம் தூக்கிச் சாப்பிடும் வகையில் கன்னட ரசிகர் ஒருவர் தனது அபிமான ஹீரோ படத்தின் முதல் முதல் ஷோவுக்கு ஒரு லட்சம் ரூபாய்க்கு டிக்கட் வாங்கியுள்ளார்.

நடந்து முடிந்த  தேர்தலில் கர்நாடக, மாண்டியா தொகுதியில் சுயேச்சையாகப் போட்டியிட்டு வென்ற சுமலதா, மறைந்த கன்னட சூப்பர் ஸ்டார் அம்பரீஷ் தம்பதியின் வாரிசு அபிஷேக். இவர் ஹீரோவாக அறிமுகமாகும் ‘அமர்’ படம் நாளை மறுநாள் 31ம் தேதி வெள்ளியன்று ரிலீஸாகிறது. இப்படத்தை நாக்சேகர் இயக்கியுள்ளார்.

மகனின் அறிமுகப்படமான அமரில் அம்பரீஷும் சில காட்சிகளில் நடித்துள்ளதால் இப்படத்திற்கு பெரும் எதிர்பார்ப்பு கிளம்பியுள்ள நிலையில் தேவநகரியைச் சேர்ந்த மஞ்சுநாத் என்ற ஒரு ரசிகர் மட்டும் முதல் நாள் முதல் காட்சியில் தனது நண்பர்கள் அனைவரும் பார்க்கும் விதமாக ஒரு லட்சம் ரூபாய் செலவழித்து டிக்கட் எடுத்து கர்நாடக திரையுலகையே வியப்பில் ஆழ்த்தியுள்ளார்.

மறைந்த அம்பரீஷ் தனது மகனின் முதல் படம் குறித்து மிகுந்த ஆர்வத்துடன் இருந்ததாகவும் ஸ்விட்சர்லாந்தில் எடுக்கப்பட்ட அபிஷேக்கின் பைக் ரேஸ் காட்சிகளைப் பார்ப்பதற்கு துடியாய்த் துடித்துக்கொண்டதாகவும் தனது பேட்டி ஒன்றில் இயக்குநர் நாக்சேகர் கூறியுள்ளார்.