’பாகுபலி’ மெகா கூட்டணியில் உருவான அடுத்த படம் குறித்த அறிவிப்பு என்று இன்று காலையிலிருந்தே பீதியைக் கிளப்பு சப்பென்று ஒரு அறிவிப்பை வெளியிட்டு மோசடி செய்துள்ளது ஒரு டப்பிங் பட கோஷ்டி. கடைசியாக அந்த முக்கிய அறிவிப்பாக வந்திருப்பதென்னவோ எட்டு வருடங்களுக்கு முந்தைய பழைய்ய்ய செய்தி.

தொடர்ந்து 11 வெற்றிப்படங்களை இயக்கி உலக சாதனை புரிந்திருக்கும் இயக்குநர் எஸ்.எஸ். ராஜமவுலி தனது 12 வது படமாக ‘ஆர்.ஆர்.ஆர்’ என்ற படத்தை இயக்கிவருகிறார். இந்தத் தலைப்புகூட தற்காலிகமானதுதான் என்று கூறப்படுகிறது.தெலுங்குப் படமாகத் துவங்கி இன்று அலியா பட், அஜய் தேவ்கான் என்று இந்தி ஸ்டார்களும் படத்தில் இணைந்திருப்பதால் இந்திய சினிமாவாகியிருக்கும் இப்படத்தில் சமுத்திரக்கனி முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.'பாகுபலி’ படத்துக்கு பிறகு ராஜமவுலி இயக்கத்தில் உருவாகும் படம் ’ஆர்ஆர்ஆர்’. அல்லுரி சிதாராமாஜு, கொமரம் பீம் என்ற இரண்டு சுதந்திரப் போராட்ட வீரர்களின் வாழ்க்கையை முன்வைத்து 1920-களில் கதை நடைபெறுகிறது. இந்தப் படத்தின் மூலம் மஹதீரா படத்துக்கு பிறகு ராம் சரண் - ராஜமவுலி ஆகியோர் இணைந்துள்ளனர்.அதேபோல் முதல்முறையாக ஜூனியர் என்டிஆரும், ராம் சரணும் இந்தப் படத்தில் இணைந்துள்ளனர். 

இன்று காலை இதே கூட்டணியின் முக்கிய அற்விப்பு ஒன்று மாலை 6 மணிக்கு வெளியாகிறது என்றவுடன் ‘ஆர் ஆர் ஆர்’தலைப்புக்கு மாற்றுத் தலைப்பை ராஜமவுலி அறிவிக்கப்போகிறார் என்று பலரும் நம்பிக்கொண்டிருக்க, 2011ல் ராஜமவுலியின் தந்தை விஜயேந்திர பிரசாத் இயக்கிய ‘ராஜண்ணா’என்கிற படத்தின் தமிழ் டப்பிங் படத்தை ஏதோ நேற்று புதிதாகத் தொடங்கிய படம்போல் அறிவித்திருக்கிறார்கள். இப்படத்தின் ஆக்‌ஷன் பகுதிகளை மட்டுமே ராஜமவுலி இயக்கியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. எட்டு வருஷத்துக்கு முந்தி எடுத்த படத்துக்கு ஒரு ஃபர்ஸ்ட் லுக்கு...அதுக்கு ஒரு பில்ட் அப்பு? நீங்கள்லாம் கண்டிப்பா நல்ல்ல்லா வருவீங்க பாஸ்.