* ஓவியாவுடைய நல்ல மனசுக்காகதான் 90ml படத்துக்கு மியூஸிக் போட்டுக் கொடுத்தேன்: சிம்பு. (ஆமா தல ஓவியாவுக்கு தாராள மனசு இருக்குதுன்னு பிக்பாஸ் - ஷோ, கலகலப்பு - படங்கள் மூலமா தெரிஞ்சுகிட்டோம்தான். ஆனா அவங்களுக்கு நல்ல மனசும் இருக்குதுன்னு நீங்க சொல்லித்தான் புரியுது. நல்ல வேளை ‘பீப்’ சவுண்டுக்கு இடம் கொடுக்காம நீங்க இதை வெளிப்படுத்துனதுக்கு தனி நன்றி தல!)

* நேர்மை  எனும் கவசத்தை அணிந்து தேர்தலில் நின்றோம்.  வெறும் நானூறு முதல் தொள்ளாயிரம் வாக்குகளே கிடைத்தன. நேர்மைக்கு மக்களிடம் ஆதரவு இல்லை என்பதால் இனி தேர்தலில் போட்டியிடுவதில்லை எனும் முடிவுக்கு வந்துவிட்டோம்: தமிழருவி மணியன். 
(ஓ மை காட்! தலைவர் இப்படியொரு முடிவுக்கு தடாலடியா வந்திருக்கிறது மூலமா மற்ற கட்சிகள் ஜெயிக்கிறது ஈஸியா போயிடுமே! உங்களோட பல்லாயிரம் தொண்டர்களை பேசாம ரஜினி கட்சியில சேர்த்துடுங்க அருவி, ரஜினியாவது பொழைக்கட்டும்.)

* வறுமைக்கோட்டுக்கு கீழ் உள்ளவர்களுக்கு ரூபாய் ரெண்டாயிரம் வழங்குவது தேர்தலுக்காக அல்ல. தகுதியுடையவர்களுக்கு மட்டுமே அந்த பணம் வழங்கப்படும்: போக்குவரத்து துறை அமைச்சர் விஜயபாஸ்கர். (ஆமா சார் எங்களுக்கும் தெரியும் தேர்தல் வருதுன்னு சொல்லி ரேஷன்ல வழக்கமா ஊத்துற கிருஷ்ணாயில கூட ஊத்தாம ஸ்டிரெய்ட் பார்வர்டா நிக்குற ஆளுங்க நீங்க. உங்கள போயி எலெக்‌ஷனுக்காக பணம் கொடுக்குறீங்கன்னு நாங்க சொல்லுவோமா? அது சரி, தகுதியுள்ள நபர்கள்!...ன்னு நீங்க சொன்னது, ஓட்டு போட தகுதியுள்ள நபர்கள்தானே?)

* ஜெயலலிதாவிற்கு ஏற்பட்ட துன்பத்திற்கு காரணமான, தி.மு.க.வுடன் சேர்ந்து தினகரன் சதித்திட்டம் தீட்டியதால்தான் அ.தி.மு.க. பிளவுப்பட்டது:    அமைச்சர் தங்கமணி. (யண்ணே அந்த பாவத்துக்கு பிராயச்சித்தமாதான், ‘குற்றவாளி ஜெயலலிதா! கைதி ஜெயலலிதா!’ன்னு சொன்ன பா.ம.க. கூட நீங்க கூட்டு வெச்சு பரிகாரம் பண்ணிட்டீங்களே! அப்புறமும் எதுக்குண்ணே இந்த கோபம், தாபம், ஆதங்கமெல்லாம்? டாக்டர் ஃபேமிலி கூட சேர்ந்து பிரச்சாரத்த பாருங்க, பிரச்சாரத்த பாருங்க)

* நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸுடன் எங்கள் கூட்டணி தொடரும், கூடுதல் தொகுதியெல்லாம் கேட்டு அடம்பிடிக்க மாட்டோம்: தேவகவுடா.
(ஹும், இது புள்ள! கொடுத்த சாப்பாடை சமர்த்தா சாப்பிட்டுட்டு, அது பாட்டுக்கு ஒரு ஓரமா ஒக்காந்து தூங்குது. கெரகம் இங்கேயும் இருக்குதுங்களே கொழந்தைங்க. அதக்குடு, இதக்குடு, அம்புட்டுக்கொடு, இம்புட்டுக்கொடுன்னு பிய்ச்சு பிடுங்கி பறாண்டி எடுக்குதுங்க.)